நேற்று பீகார் மாநிலத்தின் புதிய துணை முதலமைச்சராக பதவியேற்ற ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், தனது மனைவி ரேச்சலை “சிறந்த துணை” என்று வர்ணித்து, அவரை திருமணம் செய்யும்போது குடும்பத்தினர் அனைவரும் தனது முடிவை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு ஆதரவளித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.
“முதலில் என் அப்பாவிடம் (லல்லு பிரசாத் யாதவ்)‘நான் இந்த பெண்ணுடன் டேட்டிங் செய்கிறேன். அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன், ஆனால் அவள் கிறிஸ்துவ மதம்’ என்று தெரிவித்தேன். அதற்கு என்னுடைய அப்பா, ‘பரவாயில்லை. அது பிரச்சினை இல்லை’ என்று மிக சிம்பிளாக பதிலளித்து அதற்கு சம்மதித்தார். லாலு-ஜியைப் பற்றி மக்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இரு தரப்பும் ஒப்புக்கொண்ட பிறகு திருமணம் நடக்க வேண்டும் என்று நான் உண்மையில் விரும்பினேன். யாரும் மகிழ்ச்சியடையாமல் நாங்கள் இணைய விரும்பவில்லை. அனைவரது சம்மதத்துடன் நிறைவாக எங்கள் திருமணம் நடைபெற்றது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மேலும் என் பெற்றோர் அதைவிட மகிழ்ச்சியாக உள்ளனர்.
எனது சகோதரிகளுக்கு நிச்சயித்த திருமணங்கள் தான் நடைபெற்றன. ஆனால் வலுக்கட்டாய திருமணமாக நடக்கவில்லை. எனது அப்பா பீகாரின் சாதிச் சிக்கல்களை புரிந்துகொண்டவர். அவர் ஒரு நவீன மனிதர். என் சகோதரிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மாப்பிள்ளைகளை நிராகரிக்கும் சுதந்திரம் அவர்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டது. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.
என் தந்தை, எங்கள் குடும்பம், பீகார் பற்றி ஒரு கருத்து உள்ளது. ஆனால் உண்மையில் அவ்விஷயங்கள் அப்படி இல்லை. என் அப்பா எப்போதும் என் சகோதரிகளுக்கு சுதந்திரம் அளித்துள்ளார். அவர் அவர்களை முன்னணியில் வைத்திருப்பார்.” என்று தெரிவித்தார் தேஜஸ்வி யாதவ்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM