சென்னை: மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் கடைகள் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்படி, 900 ஸ்மார்ட் கடைகள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது. இந்த கடைகளை பெற 14 ஆயிரத்து 827 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், ஏற்கெனவே கடை வைத்திருப்பவர்களுக்கு 540 மற்றும் புதிதாக கடை வைக்க விரும்புபவர்களுக்கு 360 கடைகள் ஒதுக்கப்பட்டன.
மாநகராட்சி ஒதுக்கிய கடைகள் சிறிய அளவில் இருந்ததாலும், கேட்கப்பட்ட இடங்களில் கடைகள் கிடைக்காததால், ஸமார்ட் கடை பெற்ற மெரினா வியாபாரிகள் அவற்றை பெற மறுத்தனர். இதனால், ஸ்மார்ட் கடைகள் ஓராண்டிற்கு மேலாக மைதானங்கள், மயான பூமிகளில் குப்பை குவியல்போல் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மெரினாவில் ஸ்மார்ட் கடைகள் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கியுள்ளது. அதில், குறிப்பிட்ட காலத்திற்குள், ஒதுக்கப்பட்ட கடைகளை பெறாவிட்டால், அக்கடைகள் விண்ணப்பித்திருந்த மற்றவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஒதுக்கப்படும். அதற்கு முன்னதாக கடைகள் பெற்றுக்கொள்ளுங்கள் என்று 540 பேருக்கும் மாநகராட்சி அறிவுறுத்தி வருகிறது.