நீலகிரியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காற்றுடன் கூடிய தொடர் சாரல் மழை பெய்துவருகிறது. குறிப்பாக ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. அணைகளுக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வண்ணமே இருப்பதால் அவலாஞ்சி, பைக்காரா, கிளன்மார்கன், குந்தா ஆகிய அணைகள் திறக்கப்பட்டு உபரிநீரை தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர்.
இடைவிடாது செய்துவரும் மழை காரணமாக ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டும்… மரங்கள் பெயர்ந்து விழுந்தும், அடுத்தடுத்து பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஊட்டி- கூடலூர் சாலையில் ஆகாசப்பாலம் பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஊட்டி அருகில் உள்ள கப்பத்தொரை பகுதியில் சாலையோரத்தில் பல மீட்டர் தொலைவுக்கு மண்சரிவு ஏற்பட்டது.
இந்த சாலையில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. உடனடியாக விரைந்த மீட்புக்குழுவினர், சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் இருக்கும் ஆபத்தான அந்நிய மரங்களை அகற்றி வருகின்றனர். இதேபோல், வேலிவியூ பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து விழுந்தது. பல இடங்களில் சிறியதும் பெரியதுமாக மண்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
ஊட்டி-அவலாஞ்சி சாலையில் கேர்ன்ஹில் அருகில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர்.
மழை தொடர்ந்து பெய்துவருவதால் அந்நிய மரங்கள் விழும் அபாயமும்… மண்சரிவு அபாயமும் நீடிப்பதால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.