நம் நாட்டில் எத்தனை பெரிய நிறுவனங்கள் இருந்தாலும், பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் ஒவ்வொரு துறையிலும் கோலோச்சினாலும், இந்தியாவின் வளர்ச்சியில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி அமல், கொரோனா பெருந்தொற்று இப்படி தொடர்ச்சியாகப் பல்வேறு சவால்களைச் சந்தித்துவரும் நிலையிலும் சற்றும் துவண்டு விடாமல் தொடர்ந்து மீண்டுவந்து இந்தியத் தொழில்துறையை வளர்ச்சியின் பாதையில் கொண்டு சென்றுகொண்டிருக்கின்றன சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள். சவால்களையும் மாற்றங்களையும் எதிர்கொண்டு காலத்துக்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டும் வருகின்றன.
எதிர்காலத்தில் எம்.எஸ்.எம்.இ துறை இன்னும் பல சவால்களைச் சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. அந்த சவால்களுக்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இந்த சவால்களை எப்படி சந்தித்து, வெற்றி காண்பது, தவிர்க்க முடியாத மாற்றங்களுக்கேற்ப தங்களைத் தயார் செய்துகொள்வது எப்படி என்பது குறித்து சிந்தித்து செயல்பட வேண்டிய அவசியத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன.
எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு இப்படியொரு தேவை இருப்பதை உணர்ந்த ஆந்திரா சேம்பர் ஆஃப் காமர்ஸ் கூட்டமைப்பு அது தொடர்பாக சிறுதொழில் நிறுவனங்களுக்குத் தேவையான ஆலோசனையைத் தர ஒரு நாள் கருத்தரங்கை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
”எதிர்காலத்துக்காக எம்.எஸ்.எம்.இ-களை மேம்படுத்துதல்” (Empowering MSME’s to embrace the future) என்ற தலைப்பில் ஆகஸ்ட் 17-ம் தேதி கிண்டியில் உள்ள ஐ.டி.சி கிராண்ட் சோழா ஓட்டலில் இந்த ஒரு நாள் கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது.
இந்தக் கருத்தரங்கில் தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்கிறார்.
தமிழ்நாடு எம்.எஸ்.எம்.இ துறையின் செயலர் வி.அருண் ராய் ஐஏஎஸ் மற்றும் ஃப்ரெட்ரிச் நாவுமென் ஃபவுண்டேஷன் தலைவர் டாக்டர் கார்ஸ்டன் க்ளெய்ன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள். இதை அடுத்து சிறு, குறு, தொழில்முனைவோர்களுக்கான கருத்தரங்கு நடக்க உள்ளது.
இதில் முன்னணி தொழில்முனைவோர்களும் துறை சார்ந்த அனுபவம் கொண்டவர்களுமான கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றவிருக்கிறார்கள்.
சிறுதொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலை டிஜிட்டல்மயமாக்க வேண்டியதன் அவசியம் பற்றி கோஃப்ரூகல் நிறுவனர் குமார் வேம்பு பேசவிருக்கிறார். எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் 10 மடங்கு வளர்ச்சி காண்பதற்கு ஃபின்டெக் நிறுவனங்கள் எப்படி உதவு என்பது குறித்து சமுன்னதி நிறுவனத்தில் நிறுவனர் எஸ்.ஜி.அனில் குமார் பேசவிருக்கிறார்.
சிறுதொழில் நிறுவனங்களுக்கு பிராண்ட் என்பது எந்த அளவுடுக்கு எடுத்து சொல்ல இருக்கிறார் நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் எம்.டி., சி.கே.குமரவேல்.
மேலும், மைன்ட்ஃபுல் மார்கெட்டிங் ஸ்ட்ரேட்டஜிஸ்ட் ராஜேஷ் ஶ்ரீனிவாசன் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சி.இ.ஓ சிவராஜா ராமநாதன் ஆகியோரும் முக்கியமான உரையை ஆற்றுகிறார்கள்.
ஆந்திரா சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைவர் டாக்டர் வி.எல்.இந்திரா தத், எம்.எஸ்.எம்.இ ஐசிடி துணை கமிட்டியின் துணைத் தலைவர், ஏசிசி & ஈசி மெம்பர் எம்.கே.ஆனந்த், ஆந்திரா சேம்பர் ஆஃப் காமர்ஸின் துணைத் தலைவர் சி.நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் இந்தக் கருத்தரங்கை ஒருங்கிணைத்து நடத்த உள்ளார்கள்.
இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு தொழில்முனைவோர்கள் பயனடையலாம். இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள ஆந்திரா சேம்பர் ஆஃப் காமர்ஸின் மெம்பர்களுக்கு ரூ.3000-மும், மெம்பர் அல்லாதவர்களுக்கு ரூ.3500-மும் கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்கள் தங்கள் தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துக்கொண்டு செல்லலாமே! அதற்கு பணம் கட்டி உடனே உங்கள் பெயரைப் பதிவு கலந்து கொள்ளுங்கள்!