கோவை சேரன்மாநகர் பகுதியில் எரிவாயு குழாய் ஆய்வின் போது குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆள் உயரத்திற்கு மணல் மற்றும் கற்கள் தூக்கி வீசப்பட்டதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் பதிக்கபட்ட குழாய்களை ஆய்வு செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது. குறிப்பாக பதிக்கப்பட்ட குழாய்களில் அதிக அழுத்ததுடன் காற்று செலுத்தி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட சேரன் மாநகர் விளாங்குறிச்சி சாலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் குழாய் பதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்யும் பணியானது நடைபெற்றது.
டைட்டில் பார்க் அருகே சாலையோரம் பதிக்கப்பட்ட எரிவாயு குழாயை ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்ட முயன்ற போது அதில் லேசான உடைப்பு ஏற்பட்டு காற்று வெளியாகி உள்ளது. இதனை அறிந்த ஜேசிபி ஆப்ரேட்டர் மற்றும் ஆய்வு பணியில் இருந்த ஊழியர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். கண்ணிமைக்கும் நேரத்தில் குழாய் வெடித்ததில் குழாய்க்கு மேல் போடப்பட்ட மண் மற்றும் சிறிய கற்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டன. மேலும் மண் ஆளுயரத்திற்கு தூக்கி வீசப்படுவதைப் பார்த்தவர்கள் அங்கிருந்து அலறியடித்து தப்பி ஓடினர்.
அதிக அழுத்தத்துடன் காற்று சென்று கொண்டிருந்தபோது குழாயில் ஏற்பட்ட உடைப்பு ஏற்பட்ட கசிவால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறும் அதிகாரிகள் ஆய்வு பணியின் போது அருகில் பொதுமக்கள் இல்லாததாலும், அப்பகுதியில் போக்குவரத்து குறைவாக இருந்ததாலும் பெரும் விபத்து தவிர்க்கபட்டதாக தெரிவிக்கின்றனர். இதனிடையே எரிவாயு வாயு குழாய் வெடித்து சிதறியதில் மண் சாலையில் தூக்கி எறியப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM