புதுச்சேரி: நமது நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி பாஜக சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரத மாதா உருவசிலை ரத ஊர்வலம் புதுச்சேரி மாநிலம் முழுவதும் நடத்தப்படுகிறது.
பாரத மாதா சிலையை பொதுமக்களும், மாணவர்களும் தரிசிக்கும் வண்ணம், அனைத்து தொகுதிகளுக்கும் ஊர்வலமாக செல்வதற்கான தொடக்க நிகழ்ச்சி காலாப்பட்டு அருகே கனகசெட்டிக்குளத்தில் இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பாரத மாதா சிலைக்கு பாஜக மாநில தலைவர் சாமிநாதன், காலாப்பட்டு தொகுதி எம்எல்ஏ கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இசைக்குழுவினர் வந்தே மாதரம் உள்ளிட்ட தேசபக்தி பாடல்களை பாடி சென்றனர். கையில் தேசிய கொடி ஏந்தி அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்பி உள்ளிட்டோர் காலாப்பட்டு, பிள்ளைசாவடி, கோட்டகுப்பம், லாஸ்பேட்டை வழியாக விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியை வந்தடைந்தனர். அங்கு பள்ளி வளாகத்தில் பாரத மாதா சிலையை வரவேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதனிடையே பாஜக மாநில தலைவர் சாமிநாதன், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பிஹார் போன்று புதுச்சேரியில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்கட்சித் தலைவர் சிவா கூறியுள்ளார். புதுச்சேரி மாநிலம் என்றைக்கும் பிஹார் போன்று இருக்காது. தொடர்ந்து பாஜக கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நிறைவாக இருக்கும்.
எதிர்கட்சிகளின் கனவு பலிக்காது. தமிழகத்தில் வேண்டுமானால் பிஹார் போன்று மாறுவதற்கான வாய்ப்பு வரலாம். ஆனால், புதுச்சேரியில் அந்த வாய்ப்பு கிடையாது. பட்ஜெட் தொடர்பாக மத்திய அரசு விரைவான நடவடிக்கையை எடுக்கும். ஆளுநருக்கும் பட்ஜெட்டுக்கும் சம்பந்தமே கிடையாது. புதுச்சேரி மாநிலத்தில் 20-ம் தேதி திட்டக்குழுவை கூட்டி சரியான கோப்பை அனுப்பிவிட்டனர். அரசின் மீது குற்றம் சொல்ல எதுவும் இல்லாததால் தேவையற்ற குற்றச்சாட்டுகளை எதிர்கட்சியினர் வைக்கின்றனர்’’ என்றார்.