புதுடெல்லி: நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் (71) நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்வு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய குடியரசு துணைத் தலைவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த எம்.வெங்கய்ய நாயுடுவின் பதவிக் காலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையடுத்து, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக நேற்று காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜெகதீப் தன்கர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு முன்னாள் துணைத் தலைவர்கள் எம்.வெங்கய்ய நாயுடு, ஹமீத் அன்சாரி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜெகதீப் தன்கர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள அவருக்கு வாழ்த்துகள். அவருடைய பதவிக்காலம் இனிமையானதாக அமைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
இந்திய அரசியல் சாசனப்படி, குடியரசுத் தலைவருக்கு அடுத்தபடியாக 2-வது உயரிய பதவியாக குடியரசு துணைத் தலைவர் பதவி கருதப்படுகிறது. குடியரசு துணைத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். எதிர்பாராதவிதமாக குடியரசுத் தலைவர் பதவி காலியாகும்போது, தற்காலிக குடியரசுத் தலைவராக குடியரசு துணைத் தலைவர் பதவி வகிப்பார்.
குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றதன் மூலம் ஜெகதீப் தன்கர் மாநிலங்களவை தலைவராகவும் ஆகியுள்ளார். இனிமேல் இவர் அவையை வழிநடத்துவார்.
முன்னதாக, கடந்த 6-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கரும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதில், தன்கர் 528 (74.35%) வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஆல்வாவுக்கு 182 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. 1997-ம் ஆண்டுக்குப் பிறகு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை தன்கருக்கு கிடைத்தது.
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் சிறிய கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த தன்கர், சித்தர்காரில் உள்ள சைனிக் பள்ளியில் படித்தார். இயற்பியலில் பட்டம் பெற்ற பிறகு ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். பின்னர், முன்னணி வழக் கறிஞராக உருவெடுத்தார். ராஜஸ் தான் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றினார்.
முதல் வெற்றி
கடந்த 1989-ல் ஜுன்ஜுனு மக்களவை தொகுதியில் ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் அரசியல் வாழ்வில் அடியெடுத்து வைத்தார். 1990-ல் மத்திய இணையமைச்சராக பதவி வகித்தார்.
பின்னர் 1991-ல் காங்கிரஸில் சேர்ந்த அவர், அதே ஆண்டில் நடந்த மக்களவை பொதுத் தேர்தலில் அஜ்மீர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1993-ல் நடந்த ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில், கிஷண்கார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து, 2003-ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். 2008-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பிரச்சாரக் குழு உறுப்பினரானார். 2016-ல் பாஜகவின் சட்ட பிரிவின் தலைவரானார். 2019-ல் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக பாஜக சார்பில் அறி விக்கப்பட்ட பிறகு, ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.