Chennai Tamil News: சென்னையிலிருந்து மும்பைக்கு ரயிலில் பயணம் செய்யும் மக்கள் இனி வரும் காலங்களில் 30 முதல் 60 நிமிடங்களுக்கு முன்னதாகவே இலக்கை அடைய முடியும். 1,260 கிமீ நீளத்திற்கு இரட்டை மின்சாரக் கம்பிகள் மின்மயமாக்கப்படுவது மற்றும் இரண்டாம் பாதை இயக்கப்படுவதால் இது சாத்தியம் என மத்திய ரயில்வே பிரிவு கூறுகிறது.
இதுவரை சென்னை- மும்பை ரயிலில் செல்லும் மக்களின் பயணம் 28 முதல் 30 மணி நேரம் ஆனது. டீசல் இன்ஜின்களில் இருந்து எலெக்ட்ரிக் இன்ஜின்களுக்கு மாறினாலும், இரட்டைப் பாதை இல்லாததால் ரயில்கள் கூடுதல் நிறுத்தங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுவே அதிக பயண நேரத்திற்கான காரணம் என கூறப்படுகிறது.
ஆகையால் இம்மாதம் முதல் மத்திய இரயில்வேயின் சோலாப்பூர் பிரிவில் 27-கிமீ வாஷிம்பே-பிக்வான் கடைசிப் பாகத்தில் இரண்டாவது பாதை இயக்கப்படுகிறது.
இவ்வசதி கொண்டுவருவதற்கு முன், இவ்வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் மற்ற ரயில்களை விட ஆறு முதல் ஏழு மணி நேரம் மெதுவாகச் சென்றன. 2020 வரை, சென்னை-மும்பை பிரிவில் சராசரி வேகம் மணிக்கு 55 கி.மீ.க்கும் குறைவாகவும், சென்னை-புது டெல்லி, சென்னை-கொல்கத்தா மற்றும் சென்னை-மங்களூரு பிரிவுகளில் மணிக்கு 60 கி.மீ.க்கும் அதிகமாக இருந்தது.
2020 ஆம் ஆண்டில், இப்பாதைகளில் ஒன்றிற்கு மின்மயம் அளிக்கப்பட்டது. இதனால், சென்னை- மும்பை பயண நேரம் 23.5 மணிநேரமாகக் குறைக்கப்பட்டது.
கர்நாடகவிற்கும் மஹாராஷ்ட்ராவிற்கும் இடையே செல்லும் டவுண்ட்-குல்பர்கா பாதையின் இடையேயான கடைசிப் பகுதியை இரட்டிப்பாக்கும் பணி செவ்வாயன்று நிறைவடைந்ததாக, ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இப்போது, ரயில்களை நிறுத்தாமல் இயக்க முடியும். பயண நேரக் குறைப்பு அடுத்த கால அட்டவணையில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக இழுபறியாக இருந்த இரட்டிப்பு பணி, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்ததையடுத்து, வேகப்படுத்தப்பட்டது.சென்னை-மும்பை உட்பட, 109 வழித்தடங்களில், 152 ஜோடி ரயில்கள் இயக்க முன்மொழியப்பட்டது. தனியார் ரயில்கள் மணிக்கு 130 முதல் 160 கிமீ வேகத்தில் இயக்கப்படும்.
தெற்கு ரயில்வே ஏற்கனவே தண்டவாளங்களை பலப்படுத்தியதால் சென்னை-ரேணிகுண்டா பிரிவில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை இடையே உள்ள வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ ஆக உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil