வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகரில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். மாநகரில் வசிப்பவர்களில் பூர்வகுடிகளைவிட வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களே அதிகம். தமிழகத்தின் மொத்த மக்கள்தொகை சுமார் 15% பேர் சென்னையில்தான் காலம் தள்ளி வருகின்றனர்.
சொந்த ஊர் பாசம்:
என்னதான் புகுந்த வீடு என்றாலும் பெண்களுக்கு தாய் வீடு தானே சொர்க்கம்? அதேபோலவே என்னதான் தலைநகரில் பணிபுரிந்து ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தங்களின் சொந்த ஊருக்கு ஒரு பயணம் சென்று வந்துவிட வேண்டும் என எண்ணம் இருக்கும்.
இந்த எண்ணத்தை ஈடேற்றி கொள்ளதான் சனி, ஞாயிறு வார இறுதி விடுமுறைக்கு முன்போ (வெள்ளிக்கிழமை), பின்போ (திங்கள்கிழமை) அரசு விடுமுறை தினமாக அமைத்தால், அப்பாடா.. மூணு நாள் லீவு இருக்கு… ஊருக்கு போய் வந்திடுவோம் என்று பெரும்பாலோர் தங்களது சொந்த ஊருக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தொடர் விடுமுறை:
இதுபோன்றதொரு வாய்ப்புதான் வெளியூர்காரர்களுக்கு இந்த வாரம் வாய்த்துள்ளது. சனி. ஞாயிறு வார விடுமுறையுடன் திங்கள்கிழமை சுதந்திர தினம் என்பதால் அன்று அரசு விடுமுறை. தொடர்ந்து மூன்று நாட்கள் லீவு என்பதால் பெரும்பாலான சென்னைவாசிகள் சொந்த ஊர் பயணத்துக்கு திட்டமிட்டுள்ளனர்.
ரயில் பயணம்:
பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுவோரின் முதல் சாய்ஸ் ரயிலாக தான் உள்ளது. பேருந்து கட்டணத்தை ஒப்பிடும்போது ரயிலில் பயணக் கட்டணமும் குறைவு, நெடுந்தூர பயணத்துத்து வசதியாக இருக்கும் என்பதால் பயணிகளின் முதல் விருப்பமாக ரயில் இருக்கிறது..
டிரெயினில் டிக்கெட் கிடைக்காதவர்களின் அடுத்த ஆப்ஷன் அரசுப் பேருந்துகள். தனியார் ஆம்னி பேருந்துகளை ஒப்பிடும்போது கட்டணம் குறைவு என்பதால் இந்த ஆப்ஷன். அரசு்ப் பேருந்துகளிலும் டிக்கெட் கிடைக்காதவர்கள் மற்றும் கடைசி நேரத்தில் பயணத்தை முடிவு செய்பவர்களின் ஒரே வாய்ப்பு தனியார் ஆம்னி பேருந்துகள்தான். எப்படியாவது ஊரு்க்கு போய் சேர வேண்டும் என்ற மனநிலையில் இருக்கும் பல்லாயிரகணககான பயணிகளிடம் தனியார் ஆம்னி பேருந்துகள் பகல், இரவு என்று பாராமல் கட்டணக் கொள்ளை அடித்து வருவது ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
கட்டண கொள்ளை:
உதாரணமாக சென்னையில் இருந்து திருச்சிக்கு வார நாட்களில் ஆம்னி பேருந்துகளில் பயணக் கட்டணம் 400 ரூபாய் என்றால், வார இறுதி நாட்களில் 800 ரூபாய். அதுவே தொடர் விடுமுறை நாட்கள் என்றால் சொல்லவே தேவையில்லை… பயணக் கட்டணம் 1500 வரை கூட எகிறும். சென்னை டூ திருச்சியை போன்று மாநிலத்தின் பவ்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும் நூற்றுக்கணக்கான ஆம்னி பேருந்துகள் தொடர் விடுமுறை நாட்களில் பயணிகளிடம் அடித்து வரும் கட்டண கொள்ளையை தோரயமாக கணக்கிட்டாலே தலைசுற்றுகிறது.
அரசு சிறப்பு பேருந்துகள்:
கொரோனா காலத்துக்கு பிறகும் திருந்தாமல், கேட்பாரற்று ஆட்டம் போடும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் அராஜகத்துக்கு ஆப்பு வைக்க தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களை போலவே சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி போன்ற தொடர் விடுமுறை நாட்களிலும் தலைநகர் சென்னையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரசு சிறப்பு பேருந்துகள் கட்டாயம் இயக்கப்பட வேண்டும்.
அத்துடன் வார நாட்கள், வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள் என எல்லா நாட்களிலும் ஆம்னி பேருந்துகள் வசூலிக்க வேண்டிய பயணக் கட்டணத்தையும் அரசு நிர்ணயிக்க வேண்டும். இதன் பயனாக ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் அடிக்கும் கட்டண கொள்ளை தவிர்க்கப்படும் என்பதுடன், நஷ்டத்தில் இயங்கிவரும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை அதில் இருந்து மீட்கவும் வழி பிறக்கும். செய்யுமா திராவிட மாடல் அரசு?