தற்போதைய டெக்னாலஜி உலகில் காகித பயன்பாடு மிகவும் குறைவாக இருப்பதாக கூறப்பட்டாலும் காகிதத்தின் தேவை பெரிய அளவில் குறையவில்லை.
இந்த நிலையில் தமிழ்நாடு நியூஸ்பிரின்ட் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்த காலாண்டுக்கான அறிக்கையில் நல்ல லாபத்தை பெற்று உள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் நஷ்டத்தை சந்தித்த டிஎன்பிஎல் நிறுவனம் இந்த ஆண்டு லாபத்தை சந்தித்துள்ளது அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட்
தமிழ்நாட்டில் உள்ள அரசு நிறுவனங்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் காகிதம் வழங்கும் நிறுவனமான டிஎன்பிஎல் என்ற தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் அந்த நிறுவனம் 60 கோடிக்கும் அதிகமான லாபத்தை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.60.40 கோடி நிகர லாபம்
டிஎன்பிஎல் என்று கூறப்படும் தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட் ஜூன் 30, 2022ஆம் ஆண்டு முடிவடைந்த காலாண்டில் ரூ.60.40 கோடி நிகர லாபத்தைப் பெற்றுள்ளது. இந்த நிகர லாபம் இந்நிறுவனத்தின் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
கடந்த காலாண்டில் நஷ்டம்
தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட் முந்தைய ஆண்டில் அதாவது 2021ஆம் ஆண்டு ஜூன் 30ல் முடிந்த காலாண்டில் நிகர இழப்பாக ரூ.13.77 கோடி நஷ்டம் என அறிவிக்கப்பட்டது. ஒரே ஆண்டில் இந்நிறுவனம் நஷ்டத்தை ஈடுகட்டி வலுவான வளர்ச்சியை பெற்றுள்ளது.
முதல்முறை
இந்த ஆண்டில் தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.20.84 கோடி என்றும் PBT லாபம் ரூ.92.97 கோடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் PBT ரூ.92.97 கோடியில், பேக்கேஜிங் போர்டு யூனிட்டின் லாபம் ரூ.36 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. பேக்கேஜிங் போர்டு யூனிட்டில் இந்நிறுவனம் லாபம் ஈட்டுவது இதுவே முதல்முறை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த வருவாய்
2021ஆம் ஆண்டு ஜூன் காலாண்டில் ரூ.646.39 கோடியுடன் ஒப்பிடும்போது, 2022ஆம் ஆண்டு ஜூன் காலாண்டில் தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மொத்த வருவாய் 76 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.1136.61 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
காகித விற்பனை
காகித விற்பனை கடந்த 2021ஆம் ஆண்டு காலாண்டில் 68,704 மெட்ரிக் டன் ஆக இருந்த நிலையில் 2022ஆம் ஆண்டு ஜூன் காலாண்டில் அது 98,813 மெட்ரிக் டன் ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பேக்கேஜிங் போர்டு விற்பனை முந்தைய ஆண்டின் காலாண்டில் 39,368 மெட்ரிக் டன் ஆக இருந்த நிலையில் இந்த காலாண்டில் 44,082 மெட்ரிக் டன் ஆக உயர்ந்துள்ளது.
Tamil Nadu Newsprint and Papers Ltd posts Rs.60 crore Q1 profit
Tamil Nadu Newsprint and Papers Ltd posts Rs.60 crore Q1 profit | நஷ்டத்தில் இருந்து லாபத்திற்கு முன்னேறிய டிஎன்பிஎல்.. காகித விற்பனையில் புரட்சி!