“மின்சார மசோதாவை கைவிடும்வரை, பிரதமருக்கு முதல்வர் அழுத்தம் கொடுப்பார்” – அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் நகர்பகுதியில் அமைந்துள்ள கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், போதை பொருள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அப்பள்ளியில் 11-ம் வகுப்பு, 12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டில் போதை பொருள்கள் நடமாட்டத்தை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்கு நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தை முதல்வர் நடத்தி மிக கண்டிப்பான உத்தரவுகளை அரசு அதிகாரிகளுக்கு வழங்கி இருக்கிறார். தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் போதை பொருள்கள் பயன்பாடு இல்லாத நிலையை கொண்டு வர வேண்டும் என்பதற்காக முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதுவரை இல்லாத அளவிற்கு மக்கள் இயக்கமாக முதல்வர் இதனை எடுத்துள்ளார். நிச்சயமாக போதை பொருள் இல்லாத மாநிலமாக போதை பழக்கத்திற்கு ஆளாகாத சிறப்பு மிக்க மாநிலமாக தமிழ்நாட்டை முதல்வர் மாற்றிக் காட்டுவார்.

மின்சார திருத்த சட்ட மசோதாவை பொறுத்தவரை, நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டவுடன் தி.மு.க சார்பில் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மிகக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்.

உறுதிமொழி எடுக்கும் மாணவர்கள்

அவரின் அழுத்தம் காரணமாகவே நாடாளுமன்றத்தில் கமிட்டிக்கு திருத்த மசோதா அனுப்பப்பட்டிருக்கின்றன. அந்த மசோதா நடைமுறைக்கு வரும்பட்சத்தில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் வழங்கக் கூடிய 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாயம், விசைத்தறி, குடிசைகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரம் முற்றிலும் பாதிக்கபடக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு கடன்களை பெற்று, அரசு நிதிகளை பெற்று, மக்களின் பங்களிப்புகளை பெற்று உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் முழுவதுமாக தனியாருக்கு எந்தவித கட்டணமும் செலுத்தாமல் பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளன.

அதிகம் பயன்படுத்தக் கூடிய நுகர்வோருக்கும், தொழிற்துறை நிறுவனங்களுக்கும் அனுமதி பெற்று மின் நுகர்வோருக்கான அனுமதியை பெறுவார்கள். குறிப்பாக, ஏழை மக்களுக்கு, அடித்தட்டு மக்களுக்கு குறைந்த அளவு பயன்படுத்தக் கூடிய மின் நுகர்வோருக்கு தனியார் துறை மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கமாட்டார்கள். அதனால், ஒட்டுமொத்தமாக நாம் உருவாக்கிய கட்டமைப்பை தனியாருக்கு தாரை வார்க்கும் அந்த சூழல் தான் மின்சார திருத்த சட்ட மசோதாவில் இடம் பெற்றுள்ளன. இந்திய பிரதமருக்கு முதல்வர் இதுபற்றி கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு குரலை பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த மசோதாவை திரும்ப பெறும் வரை முதல்வர் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பார்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.