வனத்துறை அமைச்சர் தொகுதியில் வெட்டி சாய்க்கப்படும் சோலை மரங்கள்… தோட்ட உரிமையாளர் மீது வழக்கு!

பல லட்சம் ஆண்டுகள் பரிணாமத்தில் உருவான நீலகிரி சோலை மரக்காடுகளுக்கும், புல்வெளிகளுக்கும் பெரிய அளவிலான அச்சுறுத்தல்கள் தொடர்வதாக சூழலியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். மிச்சம் மீதம் இருக்கும் பூர்வீக சோலை மரங்களையும் புல்வெளிகளையும் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி வருகின்றனர். இவற்றை காக்க அரசும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

வெட்டப்பட்ட சோலை மரங்கள்

அதிலும் குறிப்பாக பூர்வீக சோலை மரங்களை வெட்டுவதற்கு நீலகிரியில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், இங்கு சட்டவிரோதமாக அரியவகை மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர். இதேபோல், கோத்தகிரி அருகில் உள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில் இருந்த சோலை மரங்கள் பலவற்றை சட்டவிரோதமாக வெட்டி சாய்த்திருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து நம்மை தொடர்பு கொண்டு பேசிய சூழலியல் ஆர்வலர் ஒருவர், “நமது வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் சொந்த தொகுதியான குன்னூர் தொகுதியில், எந்த அளவுக்கு சோலை மரங்கள் இருக்கிறதோ… அதே அளவுக்கு மரக்கடத்தலும் நடக்கிறது. கோத்தகிரி பக்கத்தில் உள்ள கட்டபெட்டு ரேஞ்சுக்கு உட்பட்ட அகாள் பகுதியில் நாவல், பலா போன்ற ஏகப்பட்ட சோலை மரங்களை ஈவு இரக்கம் இல்லாமல் வெட்டி சாய்த்திருக்கிறார்கள். தேயிலை செடிகளை நிழல் பாதித்தால் முறையான அனுமதி வாங்கி சிறிய கிளைகளை மட்டுமே அகற்ற வேண்டும். ஆனால், மரங்களை அடியோடு வெட்டி சாய்க்க யார் அனுமதி கொடுத்தது?

வனத்துறை அதிகாரிக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. வனத்துறை அமைச்சரின் சொந்த தொகுதி மட்டுமல்ல, அவர் வீட்டிலிருந்து எட்டிப்பார்த்தால் தெரியும் தொலைவில் நடந்திருக்கிறது இந்த கொடுமை. மாவட்டம் முழுவதும் மரக்கடத்தல் எப்படி நடக்கிறது என்று சொல்லவா வேண்டும்?” என ஆதங்கத்தை கொட்டினார்.

வெட்டப்பட்ட சோலை மரங்கள்

இந்த விவகாரத்தை நீலகிரி மாவட்ட உதவி வனப்பபாதுகாவலர் சரவணகுமாரின் கவனத்திற்கு கொண்டுச் சென்றோம், “இந்த இடத்தில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டிருப்பது உண்மை தான். 7 சோலை மரங்களை வெட்டியிருக்கிறார்கள். தோட்ட உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம்” என்றார்.

கூடுதல் விவரங்களை அறிய கட்டபெட்டு வனச்சரகர் செல்வத்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம் முடியவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.