புதுடெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இருந்து விலகி, பிஹாரில் 8-வது முறையாக முதல்வரான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவர் நிதிஷ் குமார், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சக்தி படைத்தவராக கருதப்படுகிறார். லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான மெகா கூட்டணியில் ஜேடியு மீண்டும் இணைந்தது காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
ஏனெனில், 2014-ல் பிரதமராக மோடி பதவியேற்றது முதல் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை எடுத்தது. கடைசியாக குடியரசு துணைத் தலைவர் தேர்தல் உள்ளிட்ட ஒவ்வொரு முயற்சியிலும் ஏதாவது ஒரு தடை ஏற்பட்டது. அதனால், இனி எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், முதல்வர் நிதிஷ்குமாரின் வரவு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வாய்ப்பை உருவாக்கி இருப்பதாக கருதப்படுகிறது. எனவே, நிதிஷை முன்னிறுத்தி பாஜக.வை வீழ்த்த வியூகம் அமைப்பது குறித்து எதிர்க்கட்சிகளிடம் மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஜேடியு நிர்வாகிகள் கூறும்போது, ‘‘பிஹாரின் அடுத்த சட்டப்பேரவை தேர்தலில், லாலு மகன் தேஜஸ்வி பிரசாத் முதல்வர் வேட்பாளர் என முடிவாகி உள்ளது. எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமாரை முன்னிறுத்தவும் காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட சிலருடன் பேச்சு நடைபெற்றுள்ளது. காங்கிரஸில் இருந்து யாரையும் ஏற்காத எதிர்க்கட்சிகள் பிரதமர் பதவிக்கு நிதிஷை முன்னிறுத்துவதில் ஆட்சேபணை இருக்காது. எனவே, 2024 மக்களவையுடன் சேர்த்து பிஹார் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது’’ என்றனர்.
சமாளிக்க தயாராகும் பாஜக
இதையே எதிர்பார்த்த பாஜக.வும் அதற்கேற்ற வகையில் எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள தயாராகிறது. இக்கட்சிக்கு தற்போது பிஹாரில் முக்கியத் தலைவர்கள் இல்லை. இதை சமாளிக்க முன்னாள் துணை முதல்வர் சுசில்குமார் மோடி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் ஷா நவாஸ் உசைன் உள்ளிட்ட சிலரை மீண்டும் களமிறக்க தயாராகி வருகிறது. இவர்கள் மூலமாக லாலு தலைமையிலான ஆட்சிகளில் காட்டாட்சி இருந்ததாகவும், ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிதிஷ் பல்டி அடித்ததாகவும் பிரச்சாரங்களை முன் வைக்க தொடங்கிவிட்டது.
எதிர்க்கட்சிகளின் வியூகம் குறித்த கேள்விகளுக்கு முதல்வர் நிதிஷ்குமார் கூறும்போது, ‘‘பிஹார் மக்கள் விரும்பாத பாஜக.வுடன் இணைந்ததால் எங்கள் கட்சிக்கு இழப்பு ஏற்பட்டது. இனி, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் தீவிரம் காட்டுவேன். நான் பிரதமர் வேட்பாளர் இல்லை. ஆனால், 2024-ல் நான் பிரதமர் ஆகிறேனோ இல்லையோ அவர் அப்பதவியில் இருக்க மாட்டார்’’ என்றார்.
லாலு கட்சியுடன் நிதிஷ் சேர்ந்ததை சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், திமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன. எனினும், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் ராகுல், பிரியங்கா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் இன்னும் நிதிஷுக்கு வாழ்த்து தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.