சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு வசதியாக, சேலம் மாவட்டத்தில் 519 அஞ்சலகங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 37 ஆயிரத்து 500 தேசியக் கொடிகளும் விற்பனையாகிவிட்டன.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை எழுச்சியுடன் கொண்டாடும் வகையில், ‘இல்லந்தோறும் மூவர்ணம்’ என்ற பிரச்சாரத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. அதன்படி, மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை 13, 14, 15-ம் தேதி ஆகிய 3 நாட்களும் ஏற்றி வைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அஞ்சல் துறை சார்பில் ரூ.25 என்ற விலையில் தேசியக்கொடி விற்பனை கடந்த 1-ம் தேதி தொடங்கப்பட்டது. சேலம் கிழக்கு கோட்டத்துக்கு 21 ஆயிரம் தேசியக்கொடிகள், இந்த கோட்டத்துக்கு உட்பட்ட 2 தலைமை அஞ்சலகங்கள், 61 துணை அஞ்சலகங்கள், 209 கிளை அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டன.
சேலம் மேற்கு கோட்டத்துக்கு 16 ஆயிரத்து 500 தேசியக் கொடிகள், இந்த அஞ்சல் கோட்டத்துக்கு உட்பட்ட ஒரு தலைமை அஞ்சலகம், 47 துணை அஞ்சலகம், 199 கிளை அஞ்சலகம் ஆகியவற்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டன. இந்நிலையில், மாவட்டத்தின் அனைத்து அஞ்சலகங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தேசியக்கொடிகள் அனைத்தும் விற்பனையாகிவிட்டன.
இது குறித்து அஞ்சல் துறை உயரதிகாரிகள் கூறுகையில், ‘அஞ்சலகங்களில், தேசியக் கொடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை அறிந்து மக்கள் ஏராளமானோர் அவற்றை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். குறிப்பாக, நகரங்கள், கிராமங்கள் என அனைத்து இடங்களில் உள்ள அஞ்சலகங்களிலும் வைக்கப்பட்ட அனைத்து கொடிகளும் விற்பனையாகிவிட்டன’ என்றார்.