மதுரை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதியில் மாணவி மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது, மதுரையில் மாணவி ஒருவர் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில், மாணாக்கர்களின் தற்கொலைகள், ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள், பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழகஅரசு கூறி வருகிறது. ஆனால், தற்கொலைகள் தொடர்கின்றன. இந்த நிலையில், மதுரையில் தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த போது விடுதி மாடியில் இருந்து பள்ளி மாணவி தவறி விழுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மதுரை, மதுரை காமராஜர் சாலையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சுமார் 3500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருமி இந்த பள்ளி வளாகத்தின் உள்ளேயே மாணவிகளின் விடுதி இருக்கிறது. இதில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 12-ம் வகுப்பு படித்து வந்த ராஜபாளையத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், விடுதியின் முதல் மாடிக்கு சென்று படித்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் படுகாயம் அடைந்த மாணவியை ஆசிரியர்கள், விடுதி வார்டன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் சக மாணவிகளிடையேயும், பெற்றோர்களிடடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், சிகிச்சை பெற்று வரும் மாணவியை மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர் நேரில் சந்தித்து விசாரித்து ஆறுதல் கூறினர்.