பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உருவாக்கப்பட்ட ஊழல் தடுப்பு பிரிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி, அதனை கலைக்க கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சித்தராமையா முதல்வராக இருந்தபோது ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன்கீழ் ஊழல் தடுப்பு பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டது. இதை எதிர்த்து கர்நாடக வழக்கறிஞர் சங்கம், சமூக மாற்றத்துக்கான அமைப்பு எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் சமூக ஆர்வலர் சித்தானந்த அர்ஸ் உள்ளிட்டோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வீரப்பா, கே.எஸ்.ஹேமலேகா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு விவரம் வருமாறு:
கர்நாடக மாநிலத்தில் ஊழல் வழக்குகளை விசாரிக்க 1984-ல் ஊழல் தடுப்பு சட்டம் நிறை வேற்றப்பட்டு, அதன்கீழ் லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்பட்டது. அந்த அமைப்பு லஞ்ச தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
லோக் ஆயுக்தாவின் காவல் பிரிவு ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த அமைப்பின் அதிகாரத்தில் தலையிடும் வகையில் புதிதாக ஊழல் தடுப்பு பிரிவு என்ற பெயரில் மாற்று அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
லோக் ஆயுக்தா அதிகாரம் மிக்க பதவியில் இருப்பவர்களையும் பாராபட்சமின்றி விசாரித்து, தண்டனை அளித்திருக்கிறது. அதன் பணியை சந்தேகிக்கும் வகையில் ஊழல் தடுப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் லோக் ஆயுக்தா போலீஸாரின் வழக்குகளில் தலையிடும் சம்பவமும் நடந்துள்ளது. ஊழல் தடுப்பு பிரிவுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டால், லோக் ஆயுக்தாவின் பாரபட்சமற்ற விசாரணையை பாதிக்கும்.
அந்த வகையில் கர்நாடக அரசு ஊழல் தடுப்பு திருத்தச் சட்டம், 1988-ன் கீழ் உருவாக்கிய ஊழல் தடுப்பு பிரிவு அரசியலமைப்புக்கு எதிரானது. ஊழல் தடுப்புச் சட்டம் 1984-ன் கீழ் ஏற்கெனவே லோக் ஆயுக்தா அமைப்பு இருப்பதால், ஊழல் தடுப்பு பிரிவு தேவை இல்லை. அதனை கலைத்துவிட அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. ஊழல் தடுப்பு பிரிவின் முன் பாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் அனைத்தும் லோக் ஆயுக்தா போலீஸ் பிரிவுக்கு மாற்றப்படுகிறது”என தெரிவிக்கப்பட்டுள்ளது.