மத்திய அரசு நடத்திய நிதி ஆயோக் கூட்டத்தில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கலந்துகொள்ளாததையடுத்து ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க கூட்டணியில் விழுந்த விரிசல் இறுதியாக ஆளும் கூட்டணியை முறித்து, புதிய கூட்டணி ஆட்சிக்கு வித்திட்டது. பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறி முதல்வர் பதவியை ராஜினாமாசெய்த நிதிஷ் குமார், மகாபந்தன் கூட்டணியில் சேர்ந்து மீண்டும் பீகாரின் முதலமைச்சராகியிருக்கிறார்.
இதன் மூலம், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேஜஸ்வி யாதவும் தற்போது துணை முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார். நிதிஷ் குமாரின் இந்த திடீர் அரசியல் மாற்றத்துக்கு, பா.ஜ.க தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. ஒருபுறம் 2024 மக்களவைத் தேர்தலில், மோடிக்கெதிராக எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் முகமாக நிதிஷ் குமார் இருப்பார் எனவும் செய்திகள் உலவுகின்றன.
இந்த நிலையில், இதுபோன்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக நிதிஷ் குமார் தன் பதிலை தெரிவித்திருக்கிறார். இன்று செய்தியாளர்களிடம் இத்தகைய கேள்விக்குப் பதிலளித்த நிதிஷ் குமார், “இரு கைகளையும் கூப்பி இதனை நான் சொல்கிறேன். அத்தகைய எண்ணம் எதுவும் எனக்கில்லை. அனைவருக்கும் வேலை செய்வதே என்னுடைய பணி. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட நான் முயற்சி செய்வேன். அவர்களும் அதனைச் செய்தால் நன்றாக இருக்கும். 2024 மக்களவைத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேரவேண்டும்” என்று கூறினார்.
மேலும், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு வழங்கப்பட்ட Z+ பிரிவு பாதுகாப்பை விமர்சித்த பா.ஜ.க-வை, “அவர்கள் ஏன் அதை எதிர்க்க வேண்டும்? அவர் துணை முதல்வர், ஏன் அவர் அதைப் பெறக்கூடாது? இதில், அவர்கள் முட்டாள்தனமாகப் பேசுகிறார்கள். மேலும் இதுபோன்று அவர்கள் பேசுவது பயனற்றது” என நிதிஷ் குமார் சாடினார்.