Tamil Nadu News: தமிழக சுகாதாரத் துறையில் இடமாற்றம் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வில் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளது என்றும் பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு நியாயம் வழங்கக்கோரி அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை கூறுகிறார்.
தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 354 ன் படி, 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு, உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை கேட்டு அரசு மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த ஜூன் மாதம் நடத்தினர்.
ஆனால் இப்போராட்டத்தில் தங்களின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதால் அரசு மருத்துவர்கள் வருந்துகின்றனர்.
Also read: கிடப்பில் போடப்பட்ட கலைஞர் அரசாணை… தமிழக அரசு மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!
மேலும், அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிடம் கூறியதாவது:
“தமிழகத்தில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற மருத்துவர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வு முற்றிலும் நேர்மையாக நடைபெறவில்லை.
இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட 25 அரசு மருத்துவர்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முன்பு கடந்த ஜூன் மாதம் ஆஜர்படுத்தினோம். அப்போது, அவர் தனது சிறப்பு உதவியாளர் வரதராஜனை DME அலுவலகத்திற்கு அனுப்பி விசாரணை நடத்தியபோது 25 பேரின் தரப்பில் உண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மருத்துவத் துறைபடி அந்தந்த பிரிவில் சிறப்பு படிப்பு படித்துள்ள வல்லுநர்கள் இருப்பதுதான் நியாயம், அப்போது தான் மக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைக்கும். ஆனால் சிறப்பு மருத்துவர்கள் இருந்தும், அவர்களை நியமிக்காமல் வேறு படிப்பு படித்த டாக்டர்களை நியமிக்கிறார்கள். இது இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளை அரசே மீறுவது போல் உள்ளது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
இந்த நியாயமற்ற செயலை அமைச்சரிடம் எடுத்துச் சென்ற போது தவறுகள் நிச்சயமாகக் களையப்படும் எனவும் தகுதியுள்ள சிறப்பு மருத்துவர்களை உரிய இடத்தில் அமர்த்துவோம் எனவும் எங்களிடம் உறுதியளித்தார். ஆனால் அது இன்றுவரை நிறைவேறவில்லை. எனவே இந்த குறிப்பிட்ட துறையில் தகுதியில்லாத மருத்துவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இது தொடர்பாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில், மயக்க மருத்துவ துறையில் உள்ள ஆறு மருத்துவர்கள் ஈடுபட்டுள்ள வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் (10609/21) முடிவிற்கு கொண்டு வர வேண்டும்.
இதுபோல, தர்மபுரியில் மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான துறையில் நான்கு இடங்கள் உள்ளன. இதில் ஒரு இடம் காலியாக உள்ளது. இருப்பவர்கள் 3 பேருமே அந்த துறைக்கான தகுதி பெற்றவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஒரு காலி இடத்திற்கு கூட அந்த மாவட்டத்தை சேர்ந்த நரம்பியல் அறுவைச் சிகிச்சை ( Neurosurgeon) நிபுணர் டாக்டர் உதயபாரதி வர விரும்பினார். ஆனால் அவ்விடத்தை அவருக்குத் தர மறுத்துவிட்டு, அவரை வேலூருக்கு அனுப்பி விட்டார்கள். இதனால் தர்மபுரிக்கு வரும் அத்தனை தலைக்காயம் மற்றும் விபத்து நோயாளிகளையும் சேலத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதில் நிறைய பேர் பாதி வழியிலேயே மரணித்து விடுகிறார்கள்.
சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் துறையில் கவுன்சிலிங் ஏதுமின்றி தற்போது மருத்துவர் ஒருவரை திடீரென்று நியமிக்கப்பட்டிருக்கிறார். இப்படி இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளை அப்பட்டமாக மீறி உத்தரவு போடுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை தெரிவிக்கிறோம்.
மேலும் முறைகேடாகப் பதவி உயர்வு பெற்ற மருத்துவர்களையும் விசாரணைக்கு உட்படுத்தி, அவருக்கு விதி முறைகளை மீறி பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக இது தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டில், அதிமுக ஆட்சியில் அரசாணை 4D 2 ஆல் பாதிக்கப்பட்டு, தங்கள் துறையை விட்டும், மாவட்டத்தை விட்டும் வெளியேற்றப்பட்ட 600 க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.
ஆகையால், இப்புகார்களை உடனடியாக விசாரித்து பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர்களுக்கு நீதி வழங்குமாறு தமிழக அரசிடம் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அரசு மருத்துவர்களின் சட்டப் போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil