தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழக ஆளுநரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்த செய்தியை பார்த்தேன்.
ஊடகத்தில் அவர் பேட்டி அளிக்கும் போது கூட நாங்கள் மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்தாலும், அரசியலும் பேசினோம் என்று சொல்லி இருக்கிறார். அரசியலுக்கு வருவது என்பது தனிப்பட்ட நபர்களுடைய விருப்பம்.
நடிகர் ரஜினிகாந்த் இன்றைக்கு அல்ல, 1996-ல் அன்றைக்கு ஆளுகின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக அவர் கருத்துக்களை தெரிவித்தார்.
அதற்குப் பிறகு, 1998 நாடாளுமன்ற தேர்தலின் போது கூட அவர் குரல் கொடுத்தார். ஆனால், அன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றியை பெற்றது. அதன் பிறகு அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்கிறார். பிறகு, கால சூழ்நிலை பொறுத்து வரவில்லை என்று சொல்வார்.
இன்றைக்கும் அரசியலுக்கு நான் வரவில்லை; ஆனால் அரசியல் பற்றி பேசுவேன் என்று சொல்லி இருக்கின்றார். அரசியலைப் பற்றி பேசினார் என்றால், பேசியவர் தான் பதில் சொல்ல வேண்டும். அரசியல் பற்றி பேசுவேன் என்று பொதுவாக பதில் சொல்லி இருக்கின்றார்.
சொன்னவர் பேசியவர் தான். ஒன்று ரஜினி சொல்லணும், இல்லை என்றால் கவர்னர் சொல்லணும். கவர்னரிடம் போய் என்ன அரசியல் பேசுகிறார் என்று தெரியவில்லை. கவர்னர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பது தான் எங்களுடைய கருத்து.
பொதுவாக அனைவருடைய கருத்தும் அது தான். அவரிடம் அரசியல் பேசினோம் என்று சொல்லி இருக்கின்றார்; அந்த விளக்கத்தை அவர்கள் தான் சொல்ல வேண்டும்.
அரசியலுக்கு வாரேன் வாரேன் சொல்லிக் கொண்டிருக்கிறார். 30 வருடமாக இன்னைக்கு வருகிறேன், நாளைக்கு வருகிறேன் என்று சொல்கிறார். பிறகு அவருடைய ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக கூட்டி, ஆலோசனை செய்வார்கள்.
அதன் பிறகு, அவர்கள் எதிர்பார்ப்போடு செல்லும் போது, இல்லை என்று சொல்லுவார். இது 30 வருடமாக பார்த்து பழக்கப்பட்ட ஒன்று. முதலில் அவர் அரசியலுக்கு வரட்டும்; பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.