புதுச்சேரி: புதுச்சேரியில் பால் பாக்கெட்டுகளில் தேசியக் கொடி ஏற்ற விழிப்புணர்வு வாசகங்களை பாண்லே அச்சிட்டுள்ளது. அத்துடன் மூவர்ணக் கொடி நிறத்தில் குல்பிகளை நாளை முதல் நான்கு நாட்களுக்கு விநியோகிக்கிறது.
புதுச்சேரியில் அரசு நிறுவனமான பாண்லே சுதந்திர தினத்தையொட்டி விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரி அரசும் தேசியக் கொடிகளை குறைந்த விலையில் விநியோகித்து வருகிறது. 75-வது சுதந்திர தினத்தையொட்டி நாளை முதல் மூன்று நாட்களுக்கு வீடுதோறும் தேசியக் கொடி ஏற்ற நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ளன. இந்நிலையில், பாண்லே பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடுவதுடன் நாளை முதல் மூவர்ண நிறத்தில் குல்பி விநியோகிக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக பாண்லே நிர்வாக இயக்குநர் முரளி கூறுகையில், “புதுச்சேரியில் பாண்லேயில் தினமும் 2 லட்சத்து 20 ஆயிரத்து 200 பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகின்றன. இதில், தேசியக் கொடியின் முக்கியத்துவத்தை அச்சிடுகிறோம். பால் பாக்கெட்டுகளில் தேசத்தை போற்றுவோம் – தேசியக் கொடியை வீடுதோறும் ஏற்றுவோம் என்று தேசியக் கொடி ஏற்ற விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
அத்துடன் மூவர்ண நிறத்தில் குல்பிகள் 13, 14, 15, 16 ஆம் தேதிகளில் அனைத்து பூத்களிலும் கிடைக்கும். குல்பி ஐஸ்ஸை குழந்தைகள், மாணவர்கள் அதிகளவில் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதால் அவர்களுக்கு தேச பக்தியை வளர்க்க மூவர்ண நிறத்தில் குல்பியை உருவாக்கியுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.