எல்லா கால கட்டத்திலும் மாமியார் மருமகள் சண்டை என்பது இன்றியமையாத ஒன்று. அவ்வப்போது சில பல பிரச்சனைகள் குடும்பத்தில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஆந்திராவில் மருமகளின் தலையை துண்டிக்கும் அளவிற்கு மாமியார் மருமகள் இடையே மோதல் ஏற்ப்பட்டுள்ளது .
ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டத்தில் உள்ள கொத்தபேட்டை ராமாபுரத்தை சேர்ந்தவர் சுப்பம்மா. சுப்பம்மாவின் மகனுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வசுந்தரா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. பின்னர் சுப்பம்மா, வசுந்தரா இடையே சண்டை ஏற்பட்டதால் வசுந்தரா தனது கணவரை தனியாக அழைத்து சென்று வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில் சொத்து பிரச்சினை காரணமாக அடிக்கடி சுப்பம்மாவுக்கும், வசுந்தராவுக்கு மோதல் நிலவி வந்த நிலையில், சமீபத்தில் வசுந்தராவின் உறவினர்கள் சிலர் சுப்பம்மாவை தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுப்பம்மா, யாருமில்லாத நேரமாக வசுந்தரா வீட்டிற்கு சென்று வசுந்தராவை கழுத்தை வெட்டிக் கொன்று தலையை தனியாக எடுத்துள்ளார்.
பின்னர் வெட்டிய தலையோடு தானே நேரில் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். மருமகளின் தலையோடு காவல் நிலையத்திற்கு வந்த சுப்பம்மாவை கண்டு போலீஸார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சரண்டர் ஆன சுப்பம்மாவை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.