குடும்ப உறுப்பினர்களின் நேரடித் தலையீடு இல்லை; ஆனால், வெற்றிகரமாக நடக்கும் பிசினஸ் நிறுவனம்..!

உங்களுக்குத் தெரிந்த எப்.எம்.சி.ஜி நிறுவனங்களைப் பட்டியலிடச் சொன்னால், ஹெச்.யு.எல், பி. அண்ட் ஜி, மாரிகோ, பதஞ்சலி எனப் பல நிறுவனங்கள் நினைவுக்கு வரும். வாடிகா, சவன்பிரஸ், ரெட் பேஸ்ட், மெஷ்வாக் எனப் பல பிராண்டுகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், டாபர் என்னும் நிறுவனம் நம்முடைய நினைவுக்கு வராது. ஆனால், எப்.எம்.சி.ஜி துறையில் முக்கியமான நிறுவனம். கடந்த நிதி ஆண்டில் ரூ.10,000 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டி இருக்கிறது.

100 ஆண்டுகளைக் கடந்தது இந்த நிறுவனம். 1884-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம், தற்போது தினசரி அலுவல்களில் புரொஃபஷனல்கள் இருக்கிறார்கள் என்றாலும் ஆறாவது தலைமுறை தாண்டியும் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சுதந்திரத்துக்கு முன்பு, லைசென்ஸ் ராஜ், அதைத் தொடர்ந்து உலகமயமாக்கல், கோவிட் எனப் பல தடைகளையும் இந்த நிறுவனம் கடந்திருக்கிறது.

S.K.Burman

மருத்துவப் படிப்பு To மருந்து தயாரிப்பு…

இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் எஸ்.கே.பர்மன். மத்திய வங்காளத்தில் இவரின் குடும்பம் இருந்தது. ஆனால், 1857-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் குடும்ப உறுப்பினர்கள் பலரும் பிரிட்டிஷ் படையினரால் கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து, மீதம் இருப்பவர்கள் கல்கத்தாவுக்குக் குடிபெயர்ந்தார்கள்.

எஸ்.கே.பர்மன் மருத்துவப் படிப்பு படித்தவர். மருத்துவம் படித்திருந்தாலும் அப்போது மருந்துகள் இல்லை. தற்போதைய சூழலுடன் ஒப்பிட்டால், அந்தக் காலத்தில் மருத்துவ வசதிகள் ஏதுமில்லை. காப்புரிமை செய்யப்பட்ட மருந்துகள் மிகக் குறைந்த அளவில் மட்டுமே இருந்தன. அப்போது இருந்தவை பெரும்பாலும் ஆயுர்வேதிக் மருந்துகள் மட்டும்தான். ஆனால், இவையும் தனித்தனியாக சிறிய நிறுவனங்கள் மட்டுமே தயாரித்து வந்தன. மருந்து தயாரிப்பு முறைப்படுத்தப்படாமலே இருந்தது. இதனால் தனக்குத் தேவையான மருந்துகளை சொந்தமாகத் தயாரிக்கத் தொடங்கினார். இந்த நிறுவனம்தான், எஸ்.கே.பர்மன் பிரைவேட் லிமிடெட். மருந்து தயாரிப்புக்காகத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்னாள்களில் ஸ்கின்கேர், டெண்டல்கேர் என எப்.எம்.சி.ஜி நிறுவனமாக மாறத் தொடங்கியது.

டாபர் பெயர் ரகசியம்…

டாக்டர் பர்மன் என்னும் பெயரை சுருக்கி டாபர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அடுத்தடுத்த தலைமுறையில் தொழில் மெள்ள மெள்ள விரிவுபடுத்தப்பட்டது. சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தொழிலில் இருந்ததால், லைசென்ஸ் ராஜ் இவர்களுக்கு சிக்கலாக இல்லை. சி.ஓ.பி லைசென்ஸ் (carry on business license) இருந்ததால் புதிதாக எந்த அனுமதியும் டாபர் வாங்கத் தேவையில்லை.

தொழிலை நடத்துவதற்கு அனுமதி தேவையில்லை என்பது சாதகமான விஷயமாக இருந்தாலும் தொழிலை நடத்த வேண்டுமே? பெரிய நிறுவனமாக இருந்தாலும் முழுமையாக குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கமே இருந்தது. ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒவ்வொருவர் நிறுவனத்தின் முக்கியமான பொறுப்பில் இருந்து வந்தனர். இது நிறுவனத்தின் சுழற்சியில் பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. பொருள்களை அனுப்புவதில் இருந்து, நிதி நிர்வாகம் என அனைத்திலும் தாமதம் ஏற்பட்டது.

டாபர்

இந்த சிக்கலைக் களைவதற்கு சர்வதேச கன்சல்டிங் நிறுவனமான மெக்கென்ஸியை அழைத்தது நிர்வாகம். இரு ஆண்டுகள் நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டை மாற்றிக் கொடுத்தது மெக்கென்ஸி. அப்போது மெக்கென்ஸி உயரதிகாரி கேட்ட கேள்வியில், நிறுவனத்தின் கொள்கைகளை மாற்றியது. உங்களது பெயரில் பர்மன் என்னும் பெயரைத் தவிர உங்களிடம் வேறு என்ன இருக்கிறது. தொழிலை நடத்துவதற்கு வேறு என்ன திறன் இருக்கிறது என்னும் கேள்வியைக் கேட்டார்.

குடும்ப உறுப்பினராக இல்லாதவர் முக்கியமான பொறுப்புகளில் இருக்கும்போது முடிவுகள் வேறாக இருக்கும் என்பதை உணர்ந்து குடும்ப உறுப்பினர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கத் தொடங்கியது டாபர் நிர்வாகம்.

நிர்வாகத்தில் இருந்து விலகிய குடும்ப உறுப்பினர்கள்…

டாபர் எப்.எம்.சி.ஜி நிறுவனமாக மட்டுமல்லாமல், மருந்து தயாரிக்கும் நிறுவனமாகவும் இருந்து. அதனால் இரு தொழில்களையும் தனியாகப் பிரித்து எப்.எம்.சி.ஜி நிறுவனத்தில் கூடுதல் கவனம் செலுத்தியது. ஒரு கட்டத்தில் பார்மா நிறுவனத்தை விற்கும் முடிவை இயக்குநர் குழு எடுத்தது. ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் பார்மா தொழில் 2008-ம் ஆண்டு விற்கப்பட்டது.

Burman Family

இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு பெரிய தொகை கிடைத்தது. இந்த நொடியில் இருந்து குடும்ப உறுப்பினர்கள் யாரும் சம்பளம் பெறும் எந்தப் பதவியிலும் இருக்கக் கூடாது என்னும் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இயக்குநர் குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவராக குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள்.

பதஞ்சலி தந்த போட்டி…

எப்.எம்.சி.ஜி துறை என்பது ஏற்கெனவே போட்டி நிறைந்தது. இதில் 2015-ம் ஆண்டு புதிய போட்டி உருவானது. அது பதஞ்சலி. மற்ற நிறுவனங்களைவிட டாபருக்கு அதிக பாதிப்பு. கிட்டத்தட்ட `வேதிக் வார்’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு இரு நிறுவனங்களும் குறிப்பிட்ட ஒரே பிரிவில் போட்டியிட்டன.

டாபரின் முக்கிய பிராண்டுகளுள் ஒன்று, டாபர் ஹனி. ஆனால், டாபர் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த தேனைவிட பதஞ்சலி நிறுவனம் தயார் செய்து விற்ற தேனின் விலை 40% குறைவு. டாபரின் நிகர லாபம் குறையக் கூடாது என்பதால், விலையைக் குறைக்காமலே இருந்தது. இது பதஞ்சலிக்கு மேலும் சாதகமாக அமைந்தது. இதனால், டாபர் ஹனியின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. கணிசமான சந்தையை பதஞ்சலியிடம் இழந்தது.

தேன்

இதன் பிறகு லாபத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியது டாபர். இதனால் இழந்த சந்தையைக் கொஞ்சம் கொஞ்சமாக மீட்கத் தொடங்கியது. மேலும், ஆயுர்வேதம் தொடர்பாக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கியது டாபர். 600-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை டாபர் நடத்தியது.

ஆயுர்வேதம் என்னும் பிரிவு மிக சிறியதாக இருந்தது. இந்தப் பிரிவை பதஞ்சலி மேலும் பெரிதாக்கிவிட்டது. பதஞ்சலியுடனான போட்டி ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் சந்தை வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதுதான் டாபரின் வாதம்.

கோவிட் காலத்தில் புதிய படைப்பு…

கோவிட் என்பது பல எம்.எம்.சி.ஜி நிறுவனங்களுக்கு விற்பனையை உயர்த்தியது. ஆனால், டாபருக்கு மட்டுமல்ல, டாபர், பிஸ்கட்டை விற்கவில்லை, எண்ணெய் இல்லை, உணவுப்பொருள் இல்லை, இதுபோல எந்த உணவுப்பொருளும் இல்லை என்பதால், கோவிட் என்பது டாபருக்கு சிக்கலே. டாபரின் எந்தப் பொருளும் அத்தியாவசியம் என்னும் பிரிவில் வரவில்லை.

பொருளாதார வளர்ச்சி

இதைத் தொடர்ந்து குழந்தைகளுகான பானத்தை அறிமுகம் செய்யப்பட்டது. டாபர் விடா என்னும் பெயரில் அறிமுகமானது. இதுபோல தொடர்ந்து பல புதிய புராடக்ட்களை உருவாக்கியது டாபர். தொடர்ந்து காலத்துக்குத் தேவையான மாற்றங்களை டாபர் செய்துகொண்டே இருக்கிறது.

ரூ.1,000 கோடி வருமானத்துக்கு மேல் நான்கு பிராண்டுகளும், 500 கோடி ரூபாய் வருமானத்துக்கு மேல் இரண்டு பிராண்டுகளும், 100 கோடி ரூபாய் வருமானத்துக்கு மேல் 12 பிராண்டுகளும் டாபர் வசம் உள்ளன.

காலத்துக்கேற்ப மாறும் நிறுவனங்களே காலகாலத்துக்கும் நிலைத்து நிற்கும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.