புதுடெல்லி: சுதந்திர தின விழாவில் பெருந்திரளாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
நாட்டில் நாள்தோறும் சராசரியாக 15,000 முதல் 20,000 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் அதிவேகமாக பரவக்கூடிய பி.ஏ-2.75 என்ற வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன்காரணமாக டெல்லியில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. டெல்லி போன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது.
இந்த சூழலில் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் பரவலை தடுக்க சுதந்திர தின விழாவில் பெருந்திரளாக கூடுவதை தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகிய தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தூய்மை இந்தியா திட்டத்தை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்துக்கு தூய்மை பணிகளை மேற்கொள்ளலாம். சுதந்திர தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடுவதை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக கல்வி நிறுவனங்கள் இந்த திட்டத்தை முன்னின்று செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.