நாகர்கோவில்: கன்னியாகுமரியில் செப்.7-ம் தேதியில் இருந்து ராகுல்காந்தி பாதயாத்திரையை தொடங்குகிறார்.
இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நாகர்கோவிலில் நேற்று கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், அவர் கூறியதாவது: ராகுல்காந்தி இந்தியா முழுவதும் 16 மாநிலங்களில் 3,500 கிலோ மீட்டர் பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த பாதயாத்திரை செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரி அருகே சுசீந்திரத்தில் தொடங்குகிறது.
களியக்காவிளை வரை 65 கிலோ மீட்டர் தூரம் குமரி மாவட்டத்திலேயே 3 நாட்கள் பாதயாத்திரை நடைபெறுகிறது. அங்கிருந்து கேரளாவுக்கு செல்லும் அவர், தனது தொகுதியான வயநாட்டிலும் பாதயாத்திரை செல்லும் வகையில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. முன்னேற்பாடு பணிகளை காங்கிரஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்பு
ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக் விஜய்சிங், எம்.பி.க்கள் விஜய் வசந்த்., ஜோதிமணி, ஜெயக்குமார், மாணிக்தாகூர், செல்லகுமார், எம்எல்ஏக்கள் ரூபி மனோகரன், பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி மற்றும் திரளாானோர் கலந்துகொண்டனர்.