ஒரு முறை பீஹார் மாநிலத்தில் உள்ள புத்த கயா சென்றிருந்த போது, ஒரு புத்த மதத் துறவியை சந்தித்தேன். அவர் துறவி மட்டுமல்ல. பெரிய படிப்பாளி. அவர் பரிந்துரை செய்த ‘சிறியதே அழகானது’ (Small Is Beautiful) ஆங்கில நூலைச் சென்னையில் தேடிப்பிடித்து வாங்கினேன். இப்போது அமேசான் இணைய தளத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது.
‘உலகின் தலைசிறந்த 100 புத்தகங்கள்’ வரிசையில் இதுவும் ஒன்றாக டைம்ஸ் இதழ் தேர்வு செய்துள்ளது. அட்டைப் படத்திலேயே மகாத்மா காந்தியின் படம் இடம் பெற்றிருந்தது. கல்வி, வேலைவாய்ப்பு, சூழலியல் என ஒவ்வொன்றுக்கும் புத்தகம் முழுக்க மாற்றியோசிக்க வைக்கும் சிந்தனைகள் இருந்தன. இவ்வளவு சிறப்புமிக்கப் புத்தகம் 1973-ம் ஆண்டு வெளிவந்தது. ஆனால், 1983-ம் ஆண்டு வாக்கில்தான், அதைப் பற்றிய பேச்சு எழுந்தது. அதற்குப் பிறகு மக்களுக்காகச் சிந்திக்கும் ஒவ்வொருவர் கையிலும் இந்தப் புத்தகம் இடம்பிடிக்கத் தொடங்கியது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ‘பைபிள்’ என்றுகூடப் புகழ்ந்து சொல்கிறார்கள்.
இந்நூலின் ஆசிரியர் இ.எஃப். ஷுமாஸர் ஜெர்மனியில் பிறந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்தவர். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகச் சில காலம் பணியாற்றினார். பின்பு பிரிட்டிஷ் தேசிய நிலக்கரிக் கழகத்தின் பொருளாதார ஆலோசகராகவும், இங்கிலாந்தின் மிகப்பெரிய இயற்கை வேளாண்மை அமைப்பான சாயில் (மண்) அசோஷியேஷன் தலைவராகவும் பணியாற்றினார்.
‘நஞ்சில்லா உணவு வேண்டும் என்றால் இயற்கை வேளாண்மைதான், அதற்கு ஒரே தீர்வு’ எனத் தீர்க்கமாகச் சொன்னார். புள்ளிவிவரங்களைச் சொல்லி ஏமாற்றும் பொருளாதாரச் சீர்கேட்டின் ஆதாரக் காரணிகளைக் கண்டறிந்து, அதற்கான மாற்றையும் தெளிவாகச் சொல்கிறார். நவீனம், புதுமை… என எதற்கெடுத்தாலும் சூழலைக் கெடுக்கும் தொழில்நுட்பங்களைப் பேசுபவர்களுக்கு மத்தியில், அணு சக்தி மனித குலத்துக்குத் தேவையற்றது என அடித்துச் சொல்கிறார். நான்கு பகுதிகளாக உள்ள இப் புத்தகத்தின் மையக்கருத்து இதுதான். ‘மனிதன் தன் வசதிகளுக்காக இயற்கையைச் சீரழிக்கிறான். இதிலிருந்து விடுபடக் காந்தியப் பொருளாதார வழி எவ்வாறு உதவி செய்கிறது, புத்த மதப் பொருளாதாரச் சிந்தனைகளை ஏன் நாம் கைக்கொள்ளக்கூடாது’ என்பதே.
இயற்கைக் கொடுத்த மூலதனங்களான நிலம், நீர், காற்று… என ஐம்பூதங்களையும் சுரண்டி எடுப்பதைக் காட்டிலும் அதைப் போற்றிப் பாதுகாத்தால், அவை இன்னும் இன்னும் வளர்ச்சி கொடுக்கும். என்று சொன்னால், இரும்பு, நிலக்கரி, சிமென்ட், மின்சாரம்… இல்லாமல் எப்படி? எனச் சிந்திக்கும் நவீன மனிதன், இந்தப் பொருள்கள் எதையும் பயன்படுத்தாமல் கட்டப்பட்ட தாஜ்மஹால் எப்படி உலக அதிசயமாக இன்னும் நிற்கிறது எனக் கேள்வி எழுப்புகிறார்.
1955-ம் ஆண்டுப் பர்மா (மியான்மார்) அரசு பொருளாதார ஆலோசனை வழங்க இவருக்கு அழைப்புவிடுத்தது. இங்குதான் ‘புத்த மதப் பொருளாதாரம்’ (Buddhist economics) என்ற புதிய கோட்பாட்டை உருவாக்கினார். சூழலுக்கு ஏற்ற, அந்தப் பகுதியில் கிடைக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தனி மனித வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் அறத்துடன் கூடிய இந்தத் தற்சார்பு பொருளாதாரம்தான் ஏற்றது என வலியுறுத்தி வந்தார். மூன்றாம் உலக நாடுகளுக்கு (வளரும் நாடுகள்) பயணம் செய்தபோது, இந்தக் கோட்பாட்டை ஆழமாகப் பேசி வந்தார்.
“நவீன பொருளாதாரம் என்பது உற்பத்தி அளவையும், பண மதிப்பையும் மட்டுமே கவனத்தில் கொள்கிறது. புதுப்பிக்கத்தக்க, புதுப்பிக்க இயலாத வளங்களை வேறுபடுத்திப்பார்ப்பதில்லை. நிலக்கரி, எண்ணெய், மரம் அல்லது நீர் என எதனை எடுத்துக்கொண்டாலும், அவை விலை அடிப்படையில் மட்டுமே பிரித்துப் பார்க்கப்படுகிறது. அனைத்திலும் விலை மிக மலிவானதே பொருளாதார ரீதியில் சிறப்பானதாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
புத்த மதப் பொருளாதாரம் இப்படி அல்ல. புதுப்பிக்க இயலாத நிலக்கரி, எண்ணெய் போன்றவையும், புதுப்பிக்கதக்க மரம், நீர் சக்தி போன்றவற்றை ஒரே கோணத்தில் பார்ப்பதில்லை. புதுப்பிக்க இயலாத வளங்களை மிக அவசியமான தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மிகுந்த கவனத்துடன் அக்கறையுடன் சேமித்தல், பாதுகாத்தல்… போன்றவற்றை விழிப்புணர்வுடன் செயல்படுவது. அதை முரட்டுத்தனமாகவும் குருட்டுத்தனமாகவும் பயன்படுத்தி வீண்விரயம் செய்வது வன்முறையாகும். வன்முறையின்றி முழுமையான அகிம்சையை அடைதல் இயலாமல் போகலாம். ஆனாலும், அனைத்து வழிகளிலும், அனைத்து மட்டங்களிலும் வன்முறையற்று வாழ்வதே நோக்கமாகும் என்கிறது புத்த மத போதனை.’’
வளரும் நாடுகளுக்காக இடைத்தரத் தொழில்நுட்பம் என்ற கொள்கையை உருவாக்கினார். இடைத்தரத் தொழில்நுட்ப வளர்ச்சிக் குழுமம் (Intermediate Technology Development Group Ltd) என்ற அமைப்பின் நிறுவன தலைவராக இருந்தார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காந்தி கல்வி மையம் ஏற்படு செய்திருந்த ‘காந்தி நினைவு உரை’ (Gandhi Memorial Lecture) நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 1973-ம் ஆண்டு இந்தியா வந்திருந்தார்.
அந்த உரையின் போது மகாத்மா காந்தியடிகள் மீதும் அவரது சீடரும் கிராம பொருளாதார மேதையுமான ஜே.சி.குமரப்பாவின் ‘நிலையான பொருளாதாரம்’ தனக்குள் புதிய சிந்தனையைப் புகுத்தியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளர். மகாத்மா காந்தியடிகளை ‘மக்கள் பொருளாதார அறிஞர்’ எனப் புகழாரம் சூட்டினார். இந்த நூலில் காந்தியடிகள், ஜே.சி.குமரப்பா ஆகியோரின் கிராம பொருளாதாரம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் தன் கல்வியை ஐந்து ஆண்டுகளில் முடிக்கும்போது 150 உழவர்களின் உழைப்பைப் பயன்படுத்துகிறான். அதாவது மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்படுகிறது. அந்த உழைப்புக்கு உபகாரமாக அந்த உழவர்கள் பெற்றது என்ன? கல்வி என்பது சலுகைகளுக்கான பாஸ்போர்ட் இல்லை என்பதை உணர வேண்டும். உழவர்களின் உழைப்பில் படித்தவன் தனது பணம் சேர்க்க பம்பாய் (மும்பை) போன்ற பெருநகரங்களுக்கு புறப்பட்டுச் செல்கிறான்.
பெரும்பாலானவர்கள் இப்படித்தான் உள்ளார்கள். ஆனால், தன்னை வளர்த்து உருவாக்கிய சமுதாயத்துக்குத் திருப்பிக் கொடுக்கவும், எளிய மனிதர்களின் வாழ்வில் ஒளியேற்ற நேரடியாகவும் மறைமுகமாகவும் உழைப்பவர்களும் இருக்கிறார்கள் என்பது நம்பிக்கையைக் கொடுக்கிறது. ‘‘பருவம் தவறாமை, பகிர்ந்து அளித்தல், பாதுகாத்தல், உழைத்து வாழ்தல்… போன்றவை உயர்ந்த மனநிலையின் உன்னத வெளிப்பாடு. இது வேளாண்மையின் அடிப்படை தத்துவம். தன் நிலத்திடம் உழவன் பொறுமையையும், விடாமுயற்சியையும், சமாதானத்தையும், அமைதியினையும், தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் கழனிக்கல்வியாக கற்றுக்கொள்கிறான். ஆனால், இன்றைய நவீன உலகம் அவனிடம் உள்ள அத்தனை நல்ல குணங்களையும் நாசம் செய்யும் வேலையில் இறங்கிவிட்டது. கிராமத்தில் வாழ்ந்தால் எதுவும் கிடைக்காது என்பதை, திரும்பத் திரும்பச் சொல்லி நகரங்களுக்கு அவனை அனுப்பித் துன்ப நிலைக்குத் தள்ளுகிறது.
இந்தியாவில் வாழ்ந்த உலகின் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான புத்தர், புத்த மதத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் ஒரு செடியை நட்டு அதை ஐந்து ஆண்டுகள் பராமரித்து வர வேண்டும் என்று தன் போதனைகளில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் போதனை உண்மையிலேயே பின்பற்றப்பட்டால் இந்தியா முழுவதும் பசுமை நிறைந்த மரங்களும், உணவுப் பொருள்களும் இருக்கும்.
நலமான உடல் கொண்ட ஒவ்வொருவருக்கும் இதைக் கட்டாயக் கடமையாக்கினால் எப்படியிருக்கும்? ஐந்து ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி மரங்கள் இருக்கும். இதை முறையாகப் பயன்ப டுத்தினால் இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களைவிட அதிக பலன் கொடுக்கும். எந்தவிதமான வெளிநாடுகளின் உதவியும் இன்றி இதைச் செய்ய முடியும். பெரிய சேமிப்பு-முதலீடுகள் தேவைப்படாது. மரங்கள் மூலம் உணவுப் பொருள்கள், நாரிழைகள், கட்டுமான பலகைகள், நிழல், நீர், தூய்மையான காற்று…. என ஏறத்தாழ மனிதனுக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருள்களும் மரங்களிடம் கிடைக்கும்.
இந்தியாவுக்கு இதை ஒரு சிந்தனை பரிசாகத் தருகிறேன். மரம் வளர்ப்பு போன்று உடனடியாகச் செய்ய வேண்டியதை எத்தகைய கல்வி தடுக்கிறது? நவீனம் என்று சொல்பவர்களை அனைத்துக்கும் மின்சாரம், சிமென்ட், கம்பி போன்றவை வேண்டும் எனச் சிந்திக்க வைத்தது எது? உண்மையான உதவி அரசு மையத்திலிருந்து, அதிகார வட்டத்திலிருந்து கிடைக்காது. ஆனால், இந்த மகத்தான பணியினை மக்களைக் கொண்டு செய்ய முடியும்.
உலகில் பிறந்த ஒவ்வொருவரும் தன் கைகளைப் பயனுள்ள முறையில் ஆக்கபூர்வமாகச் செயல்படுத்துவது இயற்கையானது; இயல்பானது என்ற எண்ணத்தை நாம் மீண்டும் சிந்திக்கத் தொடங்க வேண்டும். இப்படிச் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் வேலையின்மை, வறுமை போன்ற பிரச்னைகள் ஒழிந்துவிடும். இம்மண்ணில் அனைவரும் மகிழ்வுடன் வாழ இயற்கை நமக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது. அதைக் கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன் பயன்படுத்தினால் நல்ல வண்ணம் வாழ முடியும். மனிதன் சிறியவன்; ஆகையால், அவனுக்குச் சிறியதே அழகானது. (Man is small, and, therefore, small is beautiful)” என்ற எக்காலத்துக்கும் ஏற்ற சிந்தனையை வழங்கிய இ.எஃப்.ஷூமாஸர் 1977-ம் ஆண்டு இயற்கையுடன் கலந்தார். ஆனால், அவரது சிந்தனை, மரம் நட்டு; மகிழ்வுடன் வாழும் மனிதர்களிடம் உயிர்ப்புடன் உள்ளது.