விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மிக ஸ்தலமான இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆடி மாதக்கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தம். இந்த திருவிழாவைக் காணத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.
இந்த நிலையில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி மாதத் திருவிழா ஆகஸ்ட் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ரிஷப வாகனத்தில் உற்சவர் அம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு வைப்பாறு ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து பின் மீண்டும் கோயில் சன்னிதானம் வந்தடையும் வைபவம் நடைபெற்றது.
இந்தத் திருவிழாவுக்காகத் தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பலர், அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்து தங்களுடைய நேர்த்திக் கடனைச் செலுத்தினர். இருக்கண்குடி கோயில் திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் தலைமையில் 1275 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சார்பில் 400க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.