அண்ணாமலை திமுகவை பாராட்டுவதும், அண்ணாலை அறிக்கை முரசொலியில் செய்தியாவதும் தமிழக அரசியலில் அதிரடி மாற்றம் நிகழப்போகிற்கான அறிகுறியா என கேள்வி எழுந்துள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டியது, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் செய்தியாக வெளியாகியுள்ளது.
போதை பொருள் ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க காவல் துறையினருக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம் டாஸ்மாக் மதுபானக் கடைகளை தமிழக அரசு படிப்படியாக மூடலாமே என பாமக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கேள்வி எழுப்பியும் வருகின்றன.
திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போதை பொருள் ஒழிப்பு குறித்து இது போன்ற விழிப்புணர்வுடன் கூடிய ஒரு விளக்கத்தை தான் நான் தமிழக முதல்வரிடமிருந்து எதிர்பார்த்தேன். போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை இத்தனை விரிவாக இத்தனை தெளிவாக நம் மாநிலத்தின் முதல்வர் அறிந்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
முதல்வரை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகழ்ந்து பேசியது தமிழக அரசியல் அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் அண்ணாமலையின் இந்த கூற்றை திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் செய்தியாக வெளியிட்டு மேலும் ஆச்சரியத்தை கிளப்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் திமுகவுக்கு மாற்று நாங்கள் தான், உண்மையான எதிர்கட்சி நாங்கள் தான் என பாஜக தொடர்ந்து கூறி வந்தது.
அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் மீது அண்ணாமலை பல்வேறு விமர்சனங்களை முனவைத்து வந்தார். இருப்பினும் முதல்வர்
அண்ணாமலையை பொருட்படுத்தாமலே வந்துள்ளார். அவரது பெயரைக் கூட குறிப்பிடாமல் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் முரசொலியில் அண்ணாமலையின் அறிக்கை செய்தியாக வருவதும், அண்ணாமலை திமுகவை பாராட்டுவதையும் சாதாரண அரசியல் நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க நிகழ்விற்கா பிரதமர் மோடி தமிழகம் வந்த போது அவருடன் முதல்வர் ஸ்டாலின் நெருக்கம் காட்டினார். அந்த நிகழ்வு குறித்து அண்ணாமலையும் திமுக அரசை வெகுவாக பாராட்டி பேசினார்.
எதற்காக இப்படியொரு மாற்றம் என கேள்வி எழுந்த நிலையில் திமுக – பாஜக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா அதற்கான தொடக்கம் தான் இதுவா என்று சமூகவலைதளங்களில் விவாதங்கள் நடந்தன. இது குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம்.
“நேர்மாறான சித்தாந்தங்கள் கொண்ட பாஜகவும், திமுகவும் இதற்கு முன்னர் கூட்டணி வைத்துள்ளனர். ஆனால் இன்றைய சூழலில் தமிழகத்திலும், தேசிய அரசியலிலும் திமுகவும், பாஜகவும் எதிரெதிர் துருவங்களில் பயணித்துக் கொண்டுள்ளனர். அவர்களது சித்தாந்தத்தை இவர்கள் மறுப்பதும், இவர்களது கொள்கைகளை அவர்கள் எதிர்ப்பதும் தான் இன்றைய அரசியல் சூழலாக உள்ளது.
எனவே திமுக – பாஜக கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு இப்போது இல்லை. இருப்பினும் அமலாக்கத்துறை ரெய்டு, விசாரணை ஆகியவற்றின் காரணமாகவும், மத்திய அரசை அதிகமாக பகைத்துக் கொண்டால் தமிழகத்துக்கு வரவேண்டிய நிதி தடைபடும் என்பதாலும் திமுக பாஜகவை மென்மையாக அணுகியிருக்கலாம். திமுகவின் இந்த அணுகுமுறை பாஜகவுக்கு உற்சாகத்தை தந்திருக்கலாம்” என்கிறார்கள்.