சென்னை: கல்வி மற்றும் மருத்துவத்திற்கு செலவு செய்வது இலவசம் ஆகாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு உரையாற்றினார்.
விழாவில் பேசிய முதல்வர், “தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று வந்தாலும் கூட எனது தொகுதிக்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளது. கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி எனது தொகுதியில் அமைந்ததில் பெருமகிழ்ச்சி.
முதலமைச்சரிடம் எல்லோரும் கோரிக்கை வைப்பார்கள். ஆனால் நான் கோரிக்கை வைக்காமலேயே 10 கல்லூரியில் ஒரு கல்லூரியை எனது தொகுதிக்கு அமைச்சர் சேகர்பாபு வழங்கி செயல்படுத்தி வருகிறார்.
இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது. அதே போன்று இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் கட்டணம் கிடையாது, கல்வி மற்றும் மருத்துவத்திற்கு செலவு செய்வது இலவசம் ஆகாது. இலவசம் வேறு; நலத் திட்டங்கள் வேறு என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெண் பிள்ளைகள் படித்துவிட்டு சரியான பணிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
கொளத்தூர் தொகுதிக்கு நான் செல்லப்பிள்ளை. தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு 13 முறை தொகுதிக்கு வந்து உள்ளேன்” என்றார்.