முகமது நபி குறித்து அவதூறாக பேசிய பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவை கொலை செய்ய பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது நியமித்த தீவிரவாதியை போலீஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகமது நபி குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, அரபு நாடுகள் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு இந்த விவகாரம் பூதாகரமானது. இதையடுத்து, நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து பாஜக இடைநீக்கம் செய்தது. அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, முகமது நபி குறித்து அவதூறாக பேசியதால் அவருக்கு பல தீவிரவாத அமைப்புகள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றன. அவரை கொலை செய்யும் நோக்கில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த சில தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி, நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த ராஜஸ்தானை சேர்ந்த தையல் கடைக்காரரையும் தீவிரவாதிகள் அண்மையில் கொடூரமாக கொலை செய்து வீடியோ வெளியிட்டனர்.
இந்நிலையில், நுபுர் சர்மாவை கொலை செய்ய திட்டமிட்டதாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த முகமது நடீம் என்பவரை அம்மாநில தீவிரவாத ஒழிப்புப் படையினர் (ஏடிஎஸ்) நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகின. பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது, தெஹ்ரிக்-இ-தலிபான் ஆகிய தீவிரவாத அமைப்புகளுடன் நடீமுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், தற்போது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் உத்தரவின் பேரிலேயே நுபுர் சர்மாவை கொலை செய்ய தான் திட்டமிட்டதாக முகமது நடீம் வாக்குமூலம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து லக்னோவில் உள்ள தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் முகமது நடீமை ஏடிஎஸ் அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஏடிஎஸ் படையினருக்கு நீதிபதி அனுமதி அளித்தார்.