வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்திய விளையாட்டின் பொற்காலம் துவங்கி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் டில்லியில், நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். விளையாட்டு வீரர்கள், மோடியுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டனர்.
வீரர்கள் மத்தியில் மோடி பேசியதாவது: உங்களை சந்திப்பதில், நாட்டு மக்களை போல் நானும் பெருமைப்படுகிறேன். அனைவரையும் வரவேற்கிறேன். நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், உங்களின் கடின உழைப்பும், சாதனையும் பெருமை அளிக்கிறது.
பதக்கம் வென்றது இளைஞர்களின் சக்தியின் துவக்கம் மட்டுமல்ல. இந்திய விளையாட்டுகளின் பொற்காலம் தற்போது துவங்கி உள்ளது.கடந்த சில வாரங்களில், விளையாட்டு துறையில் இந்தியா இரண்டு சாதனைகளை படைத்துள்ளது. காமன்வெல்த்தில் பதக்கம் பெற்றதுடன், முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை இந்தியா நடத்தி உள்ளது.
செஸ் ஒலிம்பியாட்டை வெற்றிகரமாக நடத்தியது மட்டுமல்லாமல், செஸ் போட்டியில் நமது பாரம்பரியத்தை தொடர்ந்து பின்பற்றி சிறப்பாக செயல்பட்டோம். செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
கடந்த முறையை விட தற்போது, புதிதாக 4 விளையாட்டுகளில் வெற்றிக்கு வழிவகுத்துள்ளோம். அனைத்து விளையாட்டுகளிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் திறன் வெளிப்பட்டது. இதன் மூலம் விளையாட்டுத்துறையில் இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். புதிய விளையாட்டுகளில் நமது திறமையை அதிகரிக்க வேண்டும்.
இந்தியா தனது மகள்களை கண்டு பெருமை கொள்கிறது. பூஜா கெலாட்டுடன் நான் பேசினேன். உணர்ச்சிப்பூர்வமான அவரது வீடியோவை பார்த்த பிறகு, மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என அவரிடம் கூறியுள்ளேன். அவர் நாட்டிற்காக வெற்றி பெற்றவர். அதேநேரத்தில், கடின உழைப்பை எப்போதும் கைவிடக்கூடாது. இவ்வாறு மோடி பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement