'நாடு இல்லையென்றால் நாம் இல்லை'- ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு ரஜினிகாந்த் வேண்டுகோள்

சாதி, மத, கட்சி வேறுபாடின்றி நாம் எல்லாரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு, வீடுகள் முன்பு தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வலியுறுத்தியுள்ளார்.

இந்திய நாட்டின், 75-வது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி கோலகலமாக நாடுமுழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை, ‘வீடுகள் தோறும் மூவர்ணம்’ என்றுக்கூறி, நாட்டில் உள்ள அனைவரும் தங்களது வீட்டின் வெளியே தேசியக் கொடியை பறக்க விடுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து அவரின் அழைப்பை ஏற்று நாட்டு பொதுமக்களும், அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்கள் வீட்டின் முன் தேசியக் கொடியை பறக்கவிட்டு அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்லால் ஆகியோர் தங்களது வீட்டு வாயில்களில் சுதந்திர கொடியை பறக்க விட்ட புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.

image

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வணக்கம். இந்த ஆண்டு நமது நாடு சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டு. நம்ம நாட்டை வணங்கும் விதமாக, நமது எல்லோருடைய ஒற்றுமையை காட்டும்விதமாக… நமது இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு எத்தனையோ வருடங்கள், பல லட்சம் பேர் எவ்வளவோ சித்ரவதைகள், கொடுமைகள் அனுபவித்திருக்கிறார்கள். எத்தனையோ பேர் அவர்களுடைய உயிரையே தியாகம் செய்திருக்கிறார்கள்.

அந்த சுதந்திர தியாகிகளுக்கு, அந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக, வருகிற 15-ம் தேதி சாதி, மத, கட்சி வேறுபாடு இல்லாமல், நாம் எல்லாரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு, ஒரு இரண்டு அடி அல்லது மூன்று அடி கொம்புகளில் நமது தேசியக் கொடியை கட்டி நமது வருங்கால சந்ததிகளான குழந்தைகள், இளைஞர்கள் கைளால் நமது வீட்டுக்கு முன்பு அந்தக் கொடியை பறக்கவிட்டு நாம் பெருமைப்படுவோம். நாடு இல்லையென்றால் நாம் இல்லை. நாம் அனைவரும் இந்தியர்கள் என்று பெருமைப்படுவோம். ஜெய்ஹிந்த்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://publish.twitter.com/?query=https%3A%2F%2Ftwitter.com%2Frajinikanth%2Fstatus%2F1558379203610824705&widget=Tweet

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.