தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு ஆளுநராக பன்வாரி லால் புரோஹித் இருந்தபோது, பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு பெண் பத்திரிகையாளர் கன்னத்தை தட்டி சர்ச்சையில் சிக்கினார்.
ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்தது. இதற்கிடையே ஆளுநரின் செயலால் ஆத்திரமடைந்த பெண் பத்திரிகையாளர் அவரது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.
அதற்கு வருத்தம் தெரிவித்து ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், ‘தனது பேத்தி போல கருதி கன்னத்தில் தட்டினேன்’ என, அதிரடியாக விளக்கமளித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
2024-ல் BJPக்கு சிக்கல்? காரணம் இது தான்!
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அப்போது சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியதால் பேசு பொருளாக மாறியது.
இந்த களேபரத்துக்கு மத்தியில் பத்திரிகைத் துறையில் பணியாற்றும் பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக பிரபல நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார்.
இந்த பதிவு கடும் சர்ச்சையை கிளப்பியதோடு எஸ்.வி.சேகருக்கு எதிராக தமிழகம் முழுவதும் கண்டனமும் எழுந்தது. மேலும் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் எஸ்.வி.சேகர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யும் அளவுக்கு நிலமை விபரீதமாக மாறியது.
இந்த விவகாரத்தால் நெருக்கடியான சூழலை எஸ்.வி.சேகர் உருவாக்கி இருந்தபடியால் பாஜக மேலிடம் ஆத்திரத்தின் உச்சிக்குப்போனதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க எஸ்.வி.சேகருக்கு பெரிய அளவில் அழைப்பு வரவில்லை.
இதை நன்றாக உணர்ந்து இருக்கும் எஸ்.வி.சேகர் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக இருந்தாலும், தமிழக அரசியல் விவகாரத்தில் தலைகாட்டாமல் ஒதுங்கி இருக்கிறார்.
இந்நிலையில் இதற்கு மேலும் ஒதுங்கி இருந்தால் கடைசி வரை கட்சியில் ஜொலிக்க முடியாமல் போய் விடும் என கருதிய எஸ்.வி.சேகர் கட்சி நிகழ்ச்சிகளில் தனது இருப்பை காட்டிக்கொள்ள ஏதுவாக மேலிடத்தில் முறையிட்டும் எந்த சிக்னலும் வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பாஜகவின் மீது கடும் அதிருப்திக்கு உள்ளான எஸ்.வி.சேகர், கட்சியா அழைத்தால் மட்டுமே இனிமே வருவேன். இல்லாவிட்டால் பாஜக விவகாரங்களிலோ அல்லது அரசியல் விவகாரங்களிலோ தலைகாட்ட மாட்டேன்’ என கூறிவிட்டு, ‘தான் உண்டு.. தன் வேலை உண்டுன்னு’ இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே சமயம், ‘ஏரி மேல் கோபித்துக் கொண்டு கை, கால் கழுவாமல் போனால் யாருக்கு நட்டம்?’ என்று சொல்லி சமூக வலைதளவாசிகள் கேலி, கிண்டல் செய்து நக்கலாய் சிரிக்கின்றனர். அதே நேரத்தில் எஸ்.வி.சேகரின் இந்த முடிவு பாஜக மேலிடத்தை டென்ஷனாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.