‛சீதா ராமம்' படத்தால் மீண்டும் கடிதம் எழுதும் பழக்கம் – துல்கர் சல்மான் நெகிழ்ச்சி

ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் ‛சீதா ராமம்'. விஷால் சந்திரசேகர் இசையமைத்து இருந்தார். தெலுங்கு, தமிழில் இந்த படம் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு அழகிய காதல் கதையை பார்த்ததாக ரசிகர்களும், விமர்சகர்களும் பாராட்டினர். தொடர்ந்து வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

துல்கர் சல்மான் பேசுகையில், '' 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை போலவே வித்தியாசமாக உருவான 'சீதா ராமம்' படத்திற்கும் தமிழ் ரசிகர்கள் அளித்த ஆதரவு, வித்தியாசமான படைப்புகளுக்கு உங்களின் ஆதரவு உண்டு என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள். இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

'சீதா ராமம்' என்ற படமே ஒரு கனவு போன்றது. இயக்குநர் ஹனு, கதையை சொல்லும் போது இது ஒரு காவிய காதல் கதை என்பது மட்டும் புரிந்தது. இதற்கு முன் கேட்காத காதல் கதையாகவும் இருந்தது. கதையை முழுவதும் கேட்டதும் அசலாக இருந்தது. ஏனெனில் இயக்குநர் இந்த கதையை அவரது மனதின் அடியாழத்திலிருந்து எழுதியிருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு போர் போல் நடைபெற்றது.

இந்தப் படத்தில் நான் நடித்திருக்கும் ராம் எனும் கதாபாத்திரம் என் வாழ்க்கையில் மறக்க இயலாத வேடம். இந்தப் படத்தை இதுவரை நான்கைந்து முறை பார்த்து விட்டேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் இசை என்னை முழுதாக ஆக்கிரமிக்கிறது. 'சீதா ராமம்' படத்தை திரையரங்குகளுக்கு சென்று காண்பதில் தான் சிறந்த அனுபவம் கிடைக்கும் என்பதையும் உணர்ந்தேன்.

இயக்குநரிடம் கதை கேட்கும் போது கூட கடிதம் எழுதும் பழக்கம் தற்போது பெரியளவில் இல்லை என்பதால் எப்படி வரவேற்பு கிடைக்கும் என்ற எண்ணமும் இருந்தது. ஆனால் இந்தப் படத்தை பார்த்துவிட்டு ஏராளமானவர்கள் மீண்டும் கடிதம் எழுத தொடங்கி இருக்கிறார்கள். ஏதேனும் ஒரு தாளில் கடிதம் எழுதி, அதனை புகைப்படமாக எடுத்து, என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகிறார்கள். இத்தகைய டிஜிட்டல் கடித வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது.

பட வெளியிட்டிற்கு முன்னர் இந்த படத்தை எப்படி விளம்பரப்படுத்துவது என்பது எங்களுக்கு தெரியாதிருந்தது. ஆனால் படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரப்படுத்தி இருக்கலாமே..! என தற்போது நினைக்கிறோம். இருப்பினும் இந்த திரைப்படத்தை எதிர்பாராத வகையில் பெரிய அளவில் வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.