திருமலை: கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கிய பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் வருகை அதிகளவு உள்ளது. தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். இதனை பயன்படுத்தி முறைகேடாக டிக்கெட் பெற்று பக்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதற்கு தேவஸ்தானத்தில் பணிபுரியும் சில அதிகாரிகளும், ஊழியர்களும், துணைபுரிந்து வருவதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.இதில் தேவஸ்தானத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுனா என்பவர் முறைகேடாக 760 விஐபி தரிசன டிக்கெட், 350 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட், 25 சுப்ரபாத சேவை டிக்கெட் மற்றும் 32 அறைகள் பெற்று பக்தர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இந்த மோசடியில் பல லட்சம் ரூபாய் கைமாறியதாக கூறப்படுகிறது. இதில் 2 பெண்களுக்கும் தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து திருமலை முதலாவது காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பாளர் மற்றும் 2 பெண்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சில அதிகாரிகள், ஊழியர்களுக்கு இதில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளதால் விஜிலென்ஸ் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.