திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை உச்சிப் பிள்ளையார் கோயிலில் பாஜகவினர் போராட்டம் காரணமாக அரசு அதிகாரியால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
ஆகஸ்ட் 15 இந்திய நாட்டின் 75-வது பவள விழா சுதந்திர தினத்தில் அனைத்து வீடுகள் மற்றும் பிரதான இடங்களில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி 13-ஆம் தேதியிலிருந்து அனைத்து வீடுகளிலும் கொடி ஏற்றி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பாஜகவினர் திருச்செங்கோட்டில் உயரமான பகுதியான உச்சிப் பிள்ளையார் கோயிலில் தேசியக்கொடி ஏற்றுவதற்காக சில தினங்களுக்கு முன்பு அறநிலையத் துறையிடம் அனுமதி கேட்டுள்ளனர்.
இதையடுத்து உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றும் பகுதியில் வண்ணம் தீட்டிய கொடிக்கம்பம் ஒன்றை கோயில் கோபுரத்தை விட 1 அடி குறைவாக இருக்கும்படி கடந்த இரு தினங்களுக்கு முன்பு வைத்துள்ளனர். இதையடுத்து கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டுள்ள உயரமான இரும்பினால் ஆன பகுதியோடு கொடிக் கம்பம் இணைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதில் பாஜகவினர் கொடியேற்ற அனுமதி தரக் கூடாது என கார்த்திகை தீபம் குழுவில் ஒரு தரப்பினர் அறநிலையத் துறையில் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இன்று பாஜகவினர் கொடிக் கம்பத்தில் கொடியேற்ற வந்தபோது அறநிலையத் துறையின் செயல் அலுவலர் ரமணி காந்தன் அந்த கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் கொடி ஏற்றிக் கொள்ளுமாறும், கம்பத்தை அங்கிருந்து அகற்றிக் கொள்ளுமாறும் கூறியுள்ளார். அதற்கு பாஜகவினர் நாங்கள் கட்சி சார்பில் கொடியேற்றவில்லை அரசு அலுவலராக நீங்களே அந்தக் கம்பத்தில் கொடியேற்றுங்கள் என கொடியை ரமணி காந்தனிடம் கொடுத்தனர்.
அப்போது அவர் கொடியை தான் மதிப்பதாகவும் அதை வணங்கிக் கொள்கிறேன். அந்த கம்பத்தை எடுத்து விடுங்கள் என பாஜகவினரிடம் கூறி கொடியை வாங்க மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து உயரமான பகுதியான உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு அனைவரும் நடந்து சென்று கம்பத்தை வேறு பக்கம் நட்டு கொடியேற்றலாம் என சென்றனர். அதற்கு அறநிலையத்துறை இடத்தில் கொடியேற்ற அனுமதி தர முடியாது
கோயில் இடத்தில் கட்சி சார்பில் தேசியக் கொடியேற்ற அனுமதிக்க முடியாது என தெரிவித்து கொடியேற்ற மறுப்பு தெரிவித்துள்ளார்.
நாங்கள் கொடி ஏற்றவில்லை. நீங்களே கொடியேற்றுங்கள் என பாஜகவினர் கூறினர். அதற்கு அவர் கம்பத்தை அகற்றுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனால் பாஜகவினருக்கும் செயல் அலுவலருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவினர் கொடியேற்ற முற்பட்டபோது அறநிலையத் துறையின் அனுமதியின்றி கொடியேற்ற அனுமதிக்க முடியாது என தேசியக் கொடியை இழுத்து தடுத்து நிறுத்தினார்.
இதனால் இரு தரப்பினர் இடையே மேலும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்திய நாட்டில் தேசியக்கொடி ஏற்றுவதிலும் அரசியல் செய்கிறீர்களே என பாஜகவினர் தொடர் கோஷங்களை எழுப்பினர். தேசியக்கொடி ஏற்றும் வரை இங்கிருந்து நகர மாட்டோம், உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம் என அமர்ந்து சிலர் தர்ணாவில் ஈடுபட்டனர். அந்த சமயம் செயல் அலுவலர் தனக்கு நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டபோதும் இன்று கடமையை செய்வதற்காகவே இவ்வளவு உயரம் ஏறி வந்திருக்கிறேன். தேசியக்கொடி ஏற்றக்கூடாது என்பது எனது நோக்கம் அல்ல.
உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வருகிறேன் என தெரிவித்து சில நிமிடங்கள் கழித்து வந்த செயல் அலுவலர் ரமணி காந்தன் அறநிலைய துறையின் இடத்தில் கட்சியினரை கொடி ஏற்ற அனுமதிக்க முடியாது என்பதால் அரசு அதிகாரிகள் மட்டும் கொடியேற்றுவதாக தெரிவித்த பின் செயல் அலுவலர் ரமணி காந்தன் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் சேர்ந்து கொடியேற்றினார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM