மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை நெட்டிசன்கள் கனடா குமார் என பங்கமாக ட்ரோல் செய்ய காரணம் அவரிடம் கனடா பாஸ்போர்ட் இருப்பது தான்.
அதனை அவரும் மறைக்காமல் ஒப்புக் கொண்ட நிலையில், இந்தியாவின் குடிமகனே அவர் இல்லை என்றும், கனடாவுக்கே போயிடுங்க என்றும் ட்ரோல்கள் தொடர்ந்து பறந்து வருகின்றன.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் அக்ஷய் குமாரே தனது படங்கள் படு தோல்வியை சந்தித்த நிலையில், கனடாவுக்கு செல்ல நினைத்தது குறித்து பேசியிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.
அக்ஷய் குமார்
1981ம் ஆண்டு வெளியான ஹர்ஜாயி எனும் இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமானவர் அக்ஷய் குமார். 1991ம் ஆண்டு வெளியான செளகந்த் படத்தில் ஹீரோவாக நடித்த அக்ஷய் குமார் பல வெற்றிகளையும், தோல்விகளையும் தொடர்ந்து பாலிவுட்டில் ஏற்ற இறக்கத்தோடு சந்தித்து வருகிறார். தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.
ஆல் அவுட் ஆன அக்ஷய்
கடந்த 2020ல் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான லக்ஷ்மி, கடந்த ஆண்டு வெளியான பெல் பாட்டம், அட்ரங்கி ரே உள்ளிட்ட படங்கள் அக்ஷய் குமாருக்கு சொதப்பின. சூர்யவன்ஷி மட்டுமே கொஞ்சம் காப்பாற்றியது. ஆனால், இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா ரீமேக்கான பச்சன் பாண்டே, சாம்ராட் பிருத்விராஜ் மற்றும் ரக்ஷா பந்தன் என அனைத்துமே அவுட் ஆகி விட்டன.
கனடா குடியுரிமை
சமீபத்தில் அக்ஷய் குமார் ரக்ஷா பந்தன் படத்தின் புரமோஷனுக்காக அளித்த பேட்டியில் அவரிடம் உங்களது கனடா சிட்டிசன்ஷிப் பற்றி தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறதே என்கிற கேள்விக்கு, என்னிடம் கனடா குடியுரிமை இருப்பது உண்மை தான் அதை நானே பலமுறை கூறிவிட்டேன். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக நான் கனடாவுக்கே போனதில்லை. மேலும், இந்தியாவில் தான் வாழ்கிறேன். இந்திய படங்களில் தான் நடிக்கிறேன். இங்கு தான் வரியும் கட்டுகிறேன். நான் இந்தியன் என்பதிலேயே பெருமைக் கொள்கிறேன் எனக் கூறினார்.
கனடாவுக்கே போறேன்
கடந்த 2011ம் ஆண்டு தான் தனக்கு கனடா குடியுரிமை கிடைத்தது என்றும், தொடர்ந்து கிட்டத்தட்ட 13, 15 படங்கள் தோல்வி அடைந்த நிலையில், ஒரு கட்டத்தில் கனடாவுக்கே சென்று விடலாமோ என்கிற விரக்திக்கு தள்ளப் பட்டேன். ஆனால், அதன் பிறகு படங்கள் ஓட ஆரம்பித்த நிலையில், அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன் என அக்ஷய் குமார் பேசியிருப்பது பாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும், மீண்டும் அப்படியொரு நிலைமை வந்தால் இப்போதும் அந்த பாஸ்போர்ட் என்னிடம் தான் இருக்கு என்றும் அக்ஷய் பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது.