சென்னை: ‘இந்து தமிழ் திசை’ செய்தியின் எதிரொலியாக, மழைநீர் வடிகால்களில் கொசு மருந்து அடிக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சி மாநகரில் பல பகுதிகளில் கொசுக்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ செய்தித்தளத்தில் செய்தி வெளியானது. இந்தச் செய்தியின் எதிரொலியாக மழைநீர் வடிகால்களில் கொசு மருந்து அடிக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் 2,062 கி.மீ. நீளமுள்ள 8,835 மழைநீர் வடிகால் கட்டமைப்புகள், 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில், 958 கி.மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால்களில் நீர்த்தேக்கம் இருப்பது கண்டறியப்பட்டு கொசு மருந்து அடிக்கும் பணி தொடங்கப்பட்டள்ளது.
இதன்படி, மண்டல பூச்சியியல் வல்லுநர்களின் மேற்பார்வையில் 200 மண்டலங்களிலும் மழைநீர் வடிகால்களில் மலேரியா பணியாளர்களின் மூலம் கைத்தெளிப்பான்களை கொண்டு கொசுப்புழு நாசினி தெளிக்கும் பணி இன்று நடைபெற்றது. இன்று நடைபெற்ற கொசு ஒழிப்பு பணியின் மூலம் 552.9 கி.மீ நீள மழைநீர் வடிகால்களில் 2079 லிட்டர் கொசு மருந்து தெளிக்கப்பட்டுள்ளது.