அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தை கௌரவிக்கும் விதமாக ஆஸ்கர் அகாடமி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹாங்க்ஸ் நடிப்பில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ கிளாசிக் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல்தான் அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’. இந்தப் படத்தில் கரீனா கபூர், மோனா சிங், நாகசைதன்யா ஆகியோ நடித்திருந்தனர். பிரபல நடிகர் அதுல்குல்கர்னி திரைக்கதை அமைக்க, அத்வைத் சந்தன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தை வையாகாம் 18 தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, அமீர்கான் தயாரித்திருந்தார். 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் சுமார் 20 வருட போராட்டங்களுக்குப் பிறகு நேற்று வெளியானது. ஆனால் இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப்படம் முதல்நாளில் 11.70 கோடி ரூபாயும், இரண்டாம் நாளில் 7.26 கோடி ரூபாயும் மொத்தமாக இரண்டு நாட்களில் 18.96 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.
இந்நிலையில், ஆஸ்கர் அகாடமியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபாரஸ்ட் கம்ப் பட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘லால் சிங் சத்தா’ படம் கௌரவிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டு படங்களின் காட்சிகளை ஒப்பிட்டு சிறிய வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. 13 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘ஃபாரஸ்ட் கம்ப்’ திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் 6 விருதுகளை அள்ளிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram