டாஸ்மாக் பணி நியமனங்கள்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

டாஸ்மாக் நிறுவனம் உருவாக்கப்பட்டு 19 ஆண்டுகள் கடந்த நிலையிலும், நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுக்கு எந்த விதிகளையும் வகுக்காதது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் விற்பனையாளராக பணியாற்றிய மிகிரன் என்பவர், 2006ஆம் ஆண்டில் சூப்பர்வைசராக நியமிக்கப்பட்ட நிலையில், 2015ஆம் ஆண்டில் மீண்டும் விற்பனையாளர் பணிக்கு மாற்றப்பட்டார்.

இது தொடர்பான உத்தரவை எதிர்த்து அவர் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். விசாரணையின் போது, தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட மனுதாரரின் பணி வரன்முறைப்படுத்தப்படாததால் சூப்பர்வைசராக அவரை நியமித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், சூப்பர்வைசர்கள் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு எந்த விதிகளும் இல்லை எனவும் டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, டாஸ்மாக் நிறுவனம் துவங்கி 19 ஆண்டுகள் கடந்த பிறகும், பணி நியமனம், பதவி உயர்வுக்கான விதிகள் வகுக்கப்படாதது குறித்து நீதிபதி அதிர்ச்சி தெரிவித்தார்.

மேலும், அரசியல் சட்ட விதிகளின்படி, இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் நியமனங்கள் மேற்கொண்டதால் லட்சக்கணக்கான தகுதியான இளைஞர்களின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்வதாக இருந்தாலும் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி, அவ்வாறு இல்லாமல் விருப்பம் போல் அரசியல் கட்சி பிரமுகர்களை டாஸ்மாக்கில் நியமிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல எனவும், இது முறைகேடுகளுக்கும், ஊழலுக்கும் வழிவகுக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரத்தை கவனிக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதி, மனுதாரரை சூப்பர்வைசர் பணியில் இருந்து விற்பனையாளராக மாற்றிய விஷயத்தில் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.