பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. புனித தந்ததாது உட்பட அனைத்து கடவுள்களின் ஆசிகள் அதற்கு பலமான சக்தியாக அமையும் , தலதா பெரஹர நிறைவு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்தாலும் அந்த நெருக்கடியில் இருந்து நாட்டை நிச்சயம் மீட்டெடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், அதற்கு புனித தந்ததாது மற்றும் அனைத்து கடவுள்களின் ஆசிர்வாதம் பெரும் பலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வைக் கொண்டுவரும் புதிய பொருளாதாரம் தொடர்பில் அனைவரும் புதிய நம்பிக்கைகளுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா பெரஹர விழா மற்றும் நான்கு மகா தேவாலயங்களின் வருடாந்த பெரஹர விழா வெற்றிகரமாக நிறைவடைந்ததை முன்னிட்டு கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று (12) பிற்பகல் நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலமாக வந்த தியவடன நிலமே நிலங்க தேல உட்பட நான்கு மகா தேவாலயங்கள் மற்றும் ஏனைய தேவாலயங்களின் நிலமேமார் ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலில் ஜனாதிபதி அவர்களினால் வரவேற்கப்பட்டனர்.

பின்னர் தியவதன நிலமே சம்பிரதாயமாக ஜனாதிபதி அவர்களிடம் சந்தேஷப் பத்திரத்தை கையளித்தார்.

அதனைத் தொடர்ந்து, பெரஹராவில் சென்ற யானைகளை அடையாளப்படுத்தும் வகையில், “ சிந்து ” எனும் யானைக்கு, ஜனாதிபதியினால் பழங்கள் வழங்கப்பட்டன.

02

அதனையடுத்து, சம்பிரதாயப்படி ஜனாதிபதி அவர்களும் நிலமேமாரும் குழு நிலைப் புகைப்படத்துக்குத் தோற்றினர்.

பெரஹராவில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு சம்பிரதாயபூர்வமாக பரிசுகள் மற்றும் விருதுகள் ஜனாதிபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் 07 விசேட விருதுகள் உட்பட 162 விருதுகள் வழங்கப்பட்டன. இதற்காக எசல பெரஹர அறக்கட்டளை மற்றும் ஜனாதிபதி அலுவலகம் என்பன வருடாந்த அனுசரணையை வழங்குகின்றன.

பின்னர் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க பெரஹரவின் நிறைவு பற்றிய விடயங்கள் அடங்கிய சந்தேஷப் பத்திரத்தை ஜனாதிபதி தலைமையிலான சபையில் சமர்ப்பித்தார்.

கிராமிய விகாரைகளுக்கான “எசல பெரஹரா அறக்கட்டளை” நிதியுதவி வழங்கிவைத்தல் ஜனாதிபதி அவர்களினால் மேற்கொள்ளப்பட்டதுடன், “புனித தந்ததாது கலாசாரம்” புத்தகமும் வழங்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தப் பாரிய பொறுப்பை நிறைவேற்றியதற்காக தியவடனே நிலமே அவர்களை முதலில் பாராட்டுகிறேன். இந்த வரலாற்று சிறப்புமிக்க எசல மகா பெரஹர சில வருடங்களின் பின்னரே பிரமாண்டமான முறையில் நடத்த முடிந்தது. கடந்த இரண்டு வருடங்களாக பிரமாண்டமான முறையில் நடத்தும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இம்முறை பெரஹர ஊர்வலம் மிகவும் அழகாகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை ஏற்பாடு செய்த தியவடன நிலமே, பஸ்நாயக்க நிலமேமார் மற்றும் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அழகான பெரஹர ஊர்வலத்தைக் காணும் வாய்ப்பு நாட்டிற்குக் கிடைத்தது. அதேநேரம் தெவிநுவரவிலிருந்து நல்லூர் வரை பெரஹர ஊர்வலமும் நடைபெற்றது. நான்கு மகா தெய்வங்களுக்கு மட்டுமின்றி சிவன் உள்ளிட்ட ஏனைய தெய்வங்களுக்கும் பெரஹரா நடத்தப்பட்டது. இந்த பெரஹர அனைத்திலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். குறிப்பாக இந்த பெரஹர நடத்துவது நமது நாட்டின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும்.

மற்றும் நம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் நகரத்தில் ஒன்றுகூடுவதும், கண்டி நகரைச் சுற்றி புனித தந்ததாது ஏந்திய பெரஹர வலம்வருவதும் நம் நாட்டிற்குப் பாதுகாப்புக் கோரியும். கடவுளின் பாதுகாப்பு வேண்டியும் தான். இந்த நாட்டை பேரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுமேயாகும். இது நம் நாட்டின் பாரம்பரியத்திற்கு மிகவும் முக்கியமானது. எனவே, எசல மாதத்தை மிக முக்கியமான மாதமாகக் கருதுகிறோம்.

இம்முறை பெரஹர விழா முக்கியத்துவம் பெறுகிறது, ஏனெனில் இது மிகவும் கடினமான நேரத்தில் நடைபெறுகிறது. மறுபுறம், இந்த நாட்டில் பெரிய பொருளாதார வீழ்ச்சி உள்ள காலத்தில். இந்த அவலநிலை நம் அனைவரையும் பாதித்துள்ளது. இந்தக் காலத்தை இப்போதே நாம் முடித்துக் கொள்ள வேண்டும். மேலும் இதைவிட சவால்கள் இருக்கும் ஒரு காலம் வரலாம். இந்த எல்லாவற்றிலிருந்தும் நாம் மீள வேண்டும், நம் நாட்டிற்கு புதிய பொருளாதாரத்தை உருவாக்க முன்வருவதற்கு நம்மை தயார்படுத்த வேண்டும்.

புனித தந்ததாதுவிற்காக கண்டியில் நடைபெறும் இந்த எசல மகா பெரஹரா மற்றும் நாட்டில் நடைபெறும் ஏனைய சமய விழாக்கள் எமக்கு பெரும் ஆசிர்வாதங்களை பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை. அது நமக்குப் பெரும் பலமும் பாதுகாப்பும் ஆகும். இந்த நெருக்கடியில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. அதற்கு இந்த சமய விழாக்களால் கிடைக்கும் ஆசிர்வாதங்கள் பெரும் பலமாக அமையும்.

அந்த சக்தியுடன் முன்னேறுவோம். நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவோம். தந்ததாது மற்றும் அனைத்து கடவுள்களின் ஆசியுடன் அடுத்த ஆண்டுக்குள் நம் நாட்டை மீட்டெடுக்க வலிமை கிடைக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

இதனை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் “நா” மரத்தை நட்டு வைத்தார்.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே, அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல, விஜயதாச ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ரஞ்சித் பண்டார, குணதிலக ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கண்டி நகரபிதா கேசர சேனாநாயக்க, தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, நான்கு மஹா தேவாலயங்கள் மற்றும் ஏனைய தேவாலயங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பஸ்நாயக்க நிலமேமார் ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில்  கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2022-08-12

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.