சேலம்: சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரம் தொடர்பான புகாரில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த சுதா மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனர்.
ஈரோட்டில் கருமுட்டை விற்பனை செய்தது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி சுகாதாரத் துறை இணை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு ஈரோடு, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சோதனை நடத்தினர்.இதன் தொடர்நடவடிக்கையாக, சேலம் புதிய பேருந்து நிலையம், பிருந்தாவன் சாலையில் உள்ள சுதா மருத்துவமனையிலும், சுகாதாரத் துறை இணை இயக்குனர் ஜெகநாதன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சிறுமியிடமிருந்து கருமுட்டை எடுத்தது தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் மருத்துவமனையில் இருந்து கைப்பற்றினர். சிறுமியின் கருமுட்டை எடுத்த விவகாரத்தில் ஈரோடு, சேலம், ஓசூர் பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனைகளில் இயங்கி வந்த ஸ்கேன் சென்டர்களுக்கு முதல்கட்டமாக நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
இதனை தொடர்ந்து, சேலத்தில் உள்ள சுதா தனியார் மருத்துவமனைக்கும்‘சீல்’வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்கள் அனைவரையும் வேறு மருத்துவமனைகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு, 15 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டது. அனைத்து நோயாளிகளும் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டவுடன் சுகாதாரத் துறை அதிகாரிகள் மருத்துவமனையை ‘சீல்’வைத்து மூட காத்திருந்தனர்.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவமனை நிர்வாகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதனையடுத்து,‘சீல்’அகற்ற கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து மருத்துவமனை வழக்கு நடைபெற்று வந்த நிலையில், உயர் நீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ‘சீல்’அகற்றும் உத்தரவை ரத்து செய்து மீண்டும் மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்க உத்தரவிட்டது.
இதனையடுத்து ஆகஸ்ட் 5-ம் தேதி ஈரோடு சுதா மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் ‘சீல்’வைத்தனர். இதன் தொடர் நடவடிக்கையாக சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த சுதா மருத்துவமனைக்கு, சேலம் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் நெடுமாறன் தலைமையிலான குழுவினர் இன்று ‘சீல்’ வைத்து, மருத்துவமனையை மூடினர்.