தனியார் பேருந்துகளில் நியாயமான கட்டணம்: திமுக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் தனியார் பேருந்துகளில் நியாயமான கட்டணத்தை வசூலிக்க தகுந்த நடவடிக்கையை திமுக அரசு எடுத்திட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

பொங்கல் பண்டிகை, ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் மற்றும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசியப் பண்டிகைகள் விடுமுறை நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமையை ஒட்டி வந்தால், குடும்பத்தினருடனும், கிராம மக்களுடனும் இணைந்து பண்டிகையை கொண்டாடலாம் என்ற எண்ணத்தில், கூடுதலாக ஓரிரு நாட்கள் விடுமுறை எடுத்து, நகர்ப்புறத்திலிருந்து தங்கள் சொந்த கிராமங்களுக்கு பொதுமக்கள் செல்வது என்பது இயல்பான ஒன்று.

இதுபோன்ற தருணங்களில், அரசுப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுவது என்பது வாடிக்கை. இருப்பினும், அரசுப் பேருந்துகளில் இடம் கிடைக்காத சூழ்நிலையில் தனியார் பேருந்துகளை பொதுமக்கள் நாடுவது என்பது இயற்கையான ஒன்று. ஆனால், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள், பேருந்துக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்துகின்றன.

இந்த வகையில், தற்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடிவு செய்துள்ள நிலையில், தனியார் பேருந்துகளை அணுகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வகையில், பேருந்துகளின் கட்டணத்தை தனியார் நிறுவனங்கள் கடுமையாக உயர்த்தியுள்ளன.

உதாரணமாக, சென்னையிலிருந்து மதுரைக்கு 3,200 ரூபாயும், சென்னையிலிருந்து திருச்சிக்கு 3,000 ரூபாயும், சென்னையிலிருந்து நாகர்கோயிலுக்கு 3,850 ரூபாயும், சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு 4,000 ரூபாயும், ஓசூரிலிருந்து கோவில்பட்டிக்கு கிட்டத்தட்ட 4,000 ரூபாயும், வசூலிக்கப்படுவதாகவும், இந்தக் கட்டணங்கள் தனியார் பேருந்து நிறுவனங்களின் – இணையதளத்தில் வெளிப்படையாகவே இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. சாதாரணமாக 800 ரூபாய், 900 ரூபாய் என்றிருக்கக்கூடிய பேருந்துக் கட்டணங்கள் எல்லாம், இதுபோன்ற தருணங்களில் 3,000 ரூபாய், 4,000 ரூபாய் என்று விமானக் கட்டணங்களுக்கு இணையாக வசூலிக்கப்படுவது ஏற்கத்தக்கதல்ல.

இவ்வாறு தனியார் பேருந்து நிறுவனங்கள் வெளிப்படையாக கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து அரசு போக்குவரத்து துறை சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், புகார் அளிக்கப்படும் பட்சத்தில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாலும், பெரும்பாலானோர் புகார் அளிக்க முன்வருவதில்லை என்றும் கூறப்படுகிறது. தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் குறித்து அரசாங்கத்தின் சார்பில் கட்டணம் ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், பண்டிகைகள் மற்றும் விடுமுறை நாட்களில் தனியார் பேருந்துக் கட்டணத்தை வரைமுறை செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் தனியார் பேருந்துகளில் அபரிமிதமாக வசூலிக்கப்படும் பேருந்துக் கட்டணத்தை தடுத்து நிறுத்தவும், பொதுமக்கள் மற்றும் பேருந்து உரிமையாளர்களின் நலன்கள் பாதிக்காத வகையில் நியாயமான . கட்டணத்தை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.