ஆகாஷ் வானொலி “செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி” எனும் கம்பீர குரலால் வசீகரித்த பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி மும்பையில் காலமானார். அவருக்கு வயது 87.
சரோஜ் நாராயணஸ்வாமியின் பூர்வீகம் தஞ்சாவூர் ஆகும். இவர் பிறந்து வளர்ந்து படித்தது அனைத்தும் மும்பையில் தான். பிஏ ஆங்கிலம் முடித்த அவர் தமிழில் புலமை பெற்று திகழ்ந்தார். திருமணம் முடிந்து வானொலி பணிக்காக டெல்லியில் குடியேறினார்.
பணி ஓய்வுக்கு பின் மும்பையில் வசித்து வந்தார். இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்தார் என்றால் மிகையாகாது.ஒலிபரப்புத்துறையில் அவர் பணியாற்றியதை பாராட்டி இவருக்கு 2009ல் தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இறப்புச் செய்தியை வானொலியில் தெரியப்படுத்திய குரல் சரோஜ் நாராயண சுவாமியுடையதுதான். மேலும் பிரதமர் இந்திரா காந்தி என்பதற்குப் பதிலாக அன்னை இந்திரா காந்தி என மாற்றி செய்தி வாசித்து அனைவர் பாராட்டையும் பெற்றார்.
35 ஆண்டுகள் வானொலியில் பணிபுரிந்த பிறகும் ஒளிபரப்புத்துறைக்கு பங்களித்து வந்தார். தமிழ்ப் படங்கள், திரைப்படங்கள் பிரிவு ஆவணப்படங்கள், செய்தி இதழ்கள் ஆகியவற்றிற்குக் குரல் கொடுத்து வந்தார். இந்த குரலுக்கு சொந்தக்காரரான சரோஜ் நாராயணசுவாமி மண்ணை விட்டு மறைந்தார்.