செஸ் ஒலிம்பியாட்… ஹாங்காங் அணிக்காக களத்தில் மோதிய தமிழகத் தாயும் மகனும்!

கோலாகலமாக நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் களத்தில், பல சுவாரஸ்யங்களைக் காண முடிந்தது. அவற்றுள் ஒன்று, ஹாங்காங்கில் இருந்து வந்த அணியில் இடம் பெற்ற சிகப்பி கண்ணப்பனும் அவருடைய மகன் தண்ணீர்மலையும் மோதியது.

செஸ் வீராங்கனை மற்றும் கோச் சிகப்பியின் கணவர் கண்ணப்பன், ஹாங்காங்கில் செஸ் ஃபெடரேஷன் பொருளாளர் மற்றும் வாரிய உறுப்பினர். இவர்தான் ஹாங்காங் அணியின் ‘ஹெட் ஆஃப் த டெலிகேட்ஸ்’ ஆக குழுவுக்குத் தலைமையேற்று வந்திருந்தார். ஒலிம்பியாட் முடிந்து மகள், மகனுடன் சொந்த ஊர் தேவகோட்டைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த வேளையில் சிகப்பியிடம் பேசினோம்…

சிகப்பி

17 ஆண்டுகளாக ஹாங்காங்கில் வசிக்கும் சிகப்பியின் மகன் தண்ணீர்மலை, வளர்ந்து வரும் செஸ் வீரர். ஹாங்காங்கில் 9ம் வகுப்பு படிக்கிறார். மகள் கண்ணம்மை அங்கே கல்லூரி மாணவி. ஹாங்காங்கில் பள்ளிகளில் செஸ் கோச்சாகப் பணியாற்றும் சிகப்பி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ஒலிம்பியாடுக்காக செஸ் விளையாடி இருக்கிறார்.

“நான் காரைக்குடியில் பிறந்தவள். 8 வயசிலிருந்து செஸ் விளையாடுகிறேன். என்னுடைய அய்யா (அம்மாவின் அப்பா)தான் எனக்கு முதன் முதலில் செஸ் சொல்லிக் கொடுத்தார். அப்போது மதுரையில் படித்துக் கொண்டிருந்தேன்.. மதுரையில் என்னுடைய வயதினருக்காக நடத்திய செஸ் போட்டியில்தான் முதன்முதலாகப் பங்கேற்று, 3ம் இடத்தில் வந்தேன். ஒரு தன்னம்பிக்கையும் உற்சாகமும் வந்தன.

பிறகு மாவட்ட அளவிலான போட்டியில் 2வது இடம். சேலத்தில் நடந்த மாநில அளவிலான போட்டிகளில், என்னை விட வயதில் மூத்த (12 வயது) மாணவிகளுடன் விளையாடி 4வது இடம் பெற்றேன். ஆனால் அய்யா சொல்லிக் கொடுத்தது, போட்டிகளில் விளையாடியதையும் தவிர, முறையான வேறு பயிற்சி எதுவும் இல்லை.

பின்னர், தேசிய அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக இரண்டு பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்றேன். தேசிய அளவில் முதலிடத்தில் வந்தால்தான் சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ள முடியும். என்னால் 3, 4ம் இடங்களில் வர முடிந்ததே தவிர முதலிடத்துக்கு வர முடியவில்லை. 2002ல் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான செஸ் போட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் விளையாடி 2வது இடத்தை வென்றேன். அதுதான் நான் விளையாடிய கடைசிப் போட்டி. அதன் பின்னர் திருமணம் ஆகிவிட்டது. என் கணவர் கண்ணப்பன் அப்போது நைஜீரியாவில் இருந்ததால், நைஜீரியா போய்விட்டேன்!” – அழகாகத் தமிழில் உரையாடினார் சிகப்பி.

தண்ணீர்மலை

“ஹாங்காங் அணியில் இடம்பெற்றது எப்படி?’

“2005ல் என் கணவர் ஹாங்காங்கில் பணியில் சேர்ந்ததால், நாங்கள் ஹாங்காங் போனோம். அந்தக் காலகட்டத்தில் அங்கே பெண்கள் யாருமே செஸ் விளையாடவில்லை. அங்கே போய் ஒரே ஒரு ஓப்பன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றேன். தரவரிசையில் 1983வது ராங்க் பெற்றேன். மகள் பிறந்த பிறகு விளையாடுவதை நிறுத்திவிட்டேன். 2016 முதல், ஹாங்காங்கில் பெண்கள் செஸ் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தனர். பள்ளிகளில் சிறு குழந்தைகள் கற்றுக் கொள்ளத் துவங்கினர். நான் பள்ளிகளில் செஸ் பயிற்சியாளராகச் சேர்ந்து, பயிற்சி கொடுக்கத் துவங்கினேன். ஹாங்காங் வீராங்கனைகளுடன் அசர்பைஜான் நாட்டில் நடந்த செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்றோம். `Woman FIDE Master’ டைட்டில் கிடைத்தது. பிறகு பெரிதாகப் போட்டிகளில் விளையாடவில்லை. கோச்சாக மட்டும்தான் இருந்தேன்..

இந்த முறை, நமது ஊரில் ஒலிம்பியாட் நடந்ததால் சந்தோஷமாகக் கலந்து கொண்டோம். எங்கள் மகனை இங்கே விளையாட வைக்கவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. கோவிட் தொற்றால் 3 வருடங்களாக ஊருக்கு வரவே இல்லை. இப்போதுதான் பிள்ளைகளுடன் வந்திருக்கிறோம். எங்கள் மகன் ஒலிம்பியாடில் `கேண்டிடேட் மாஸ்டர்’ பட்டம் பெற்றான். நான் விளையாடிய போட்டிகள் மிகவும் கடுமையாக இருந்தன. போஸ்டோரிகோ நாட்டைச் சேர்ந்த வீராங்கனையுடனான போட்டியில் வென்று, WIM வென்றேன். 6 வருடங்கள் கழித்து விளையாடி இருக்கிறேன்.

ஒலிம்பியாட் பற்றி ஜூனில்தான் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. மிகக் குறுகிய கால அவகாசமே இருந்ததால் சரியான பயிற்சி இல்லை. நம் நாட்டின் விஸ்வநாதன் ஆனந்த், ஜூடித் பெர்க் இருவரும் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். ஆனந்த் சாரைப் பார்த்துதான் நான் விளையாடவே வந்தேன். என்னுடன் மதுரை, சென்னையில் விளையாடிய பல பெண்களை இங்கே கோச்சாக, ஆர்பிட்ரர் ஆகப் பார்த்தது சந்தோஷமாக இருந்தது. நமது பிரதமர், முதல்வர் எல்லோரையும் நேரில் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி!” என்று குரலில் உவகை பொங்கக் கூறினார் சிகப்பி.

“நம்ம சென்னையை என் கூட வந்த ஹாங்காங் குழுவுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. மிகவும் பயந்துகொண்டே வந்தார்கள். ‘இண்டியாவில் ஸேஃப்டி இல்லையாமே’ என்றுதான் மிகவும் பயந்தார்கள். ‘உங்க ஊரில் தண்ணீர் நல்லா இருக்காதாமே!’ என்று தண்ணீரெல்லாம் கொண்டுவந்தார்கள். ஆனால் இங்கே வந்து பார்த்தபின் நம் ஊரையும் உணவையும் மிகவும் ரசித்தார்கள்” என்று கூறும் சிகப்பிக்கு, மகன் தண்ணீர்மலையை சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஆக்க வேண்டும் என்பதே லட்சியம்.

“இப்போது அவனுக்குப் பயிற்சி கொடுத்து தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறோம். வெனிசுலா நாட்டைச் சேர்ந்த கோச்சிடம் பயிற்சி பெறுகிறான்.. ஹாங்காங்கில் நமது நாடு மாதிரி அடிக்கடி டோர்னமென்ட் எல்லாம் இருக்காது.. அதனால் சம்மர் லீவில் வெளியே அழைத்துச் சென்று போட்டிகளில் கலந்துகொள்ள வைக்கிறோம். ஆசிய அளவில் 5ம் இடத்துக்கு வந்திருக்கிறான். அவனது படிப்பும் கெடாமல், அதே சமயம் செஸ்ஸிலும் முன்னணிக்கு கொண்டுவரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்றார் அக்கறை மிகுந்த தாயாக.

தமிழகத்திலிருந்து பிரபலமாகி இருக்கும் பல வீரர்களைப் போல, கூடிய விரைவில் தண்ணீர்மலையும் பேசப்படுவார்.

– பிரேமா நாராயணன்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.