நியூயார்க்:அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியின்போது, இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை, கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் ஈரானின் புரட்சிகர படையின் ஆதரவாளராக இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மும்பையில் பிறந்தவர், பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 75. இவர் எழுதிய, ‘த சட்டானிக் வெர்ஸஸ்’ என்ற புத்தகம், முஸ்லிம்களின் மனதை புண்படுத்துவதாக கூறி, உலகின் பல இடங்களிலும் போராட்டங்கள் நடந்தன.இந்தப் புத்தகம், 1988ல் ஈரானில் தடை செய்யப் பட்டது. பின், பல இஸ்லாமிய நாடுகளிலும் தடை செய்யப்பட்டது.
‘ருஷ்டியை கொன்றால், 26 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்’ என ஈரானின் மறைந்த தலைவர் அயதுல்லா கொமேனி அப்போது அறிவித்திருந்தார்.இதையடுத்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 10 ஆண்டுகள் போலீஸ் பாதுகாப்புடன் இருந்தார் ருஷ்டி; பிறகு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். கடந்த 2000ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தார். பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்காமல் இருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சல்மான் ருஷ்டி கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர், மேடைக்குச் சென்று சல்மான் ருஷ்டியை கத்தியால் சரமாரியாக குத்தினார். மேடையில் சரிந்து விழுந்த சல்மான் ருஷ்டி உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவருடைய கழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவர் அபாய கட்டத்தில் உள்ளதாகவும், பார்வை பறிபோக வாய்ப்புள்ளதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.இதற்கிடையே, ருஷ்டியை தாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில், அவர் நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஹாரி மட்டார், 24, என்பது தெரியவந்துள்ளது.அவருடைய சமூக வலை தள பக்கங்களை ஆய்வு செய்தபோது, ஷியா முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகவும்,ஈரானின் மறைந்த தலைவர் அயதுல்லா கொமேனியின் புரட்சிகர படைக்கு ஆதரவாகவும் அவர் பல பதிவுகளை வெளியிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த அமைப்புகளுடன் நேரடி தொடர்பு இல்லாத நிலையிலும், ஆதரவாளராக இருந்துள்ளார். ஹாரி மட்டாரின் பூர்வீகம் உள்ளிட்டவை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement