National Flag Profile Picture: வீட்டுக்கு வீடு தேசியக் கொடியை ஏற்றவும், ப்ரொபைல் படமாக தேசியக் கொடியை வைக்கவும் அழைப்பு விடுத்த பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்றது ஆர்எஸ் அமைப்பு. தேசியக் கொடியை முகப்பு படமாக வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்னதாக கோரிக்கையை விடுத்திருந்தார். ஆனால், இதுவரை தேசியக் கொடியை ஏற்காத ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ் என்பதால், இந்த விவகாரம் பெரிய அளவில் விவாதப் பொருளானது.
தேசியக் கொடியிலுள்ள தர்மச் சக்கரமான அசோக சக்கரம் கூடாது; காவியைத் தேசியக் கொடியாக்க வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் என்ற கருத்துக்களும் எழுந்தன. இந்த நிலையில், 75வது சுதந்திர தினத்திற்கு முன்னதாக RSS தனது சமூக ஊடக கணக்குகளின் காட்சி படத்தை மூவர்ணமாக மாற்றியது.
‘ஹர் கர் திரங்கா’ மற்றும் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆர்எஸ்எஸ் தனது ஆதரவை வழங்கியது.
அரசு, மற்றும் தனியார் அமைப்புகளால் நடத்தப்படும் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் மக்களும், ஸ்வயம்சேவகர்களின் முழு ஆதரவையும் பங்கேற்பையும் வழங்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் ஜூலை மாதமே கேட்டுக் கொண்டிருந்தது.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்து 76-ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு தங்கள் உயிர் நீத்த தியாகிகளையும், சுந்தந்திரத்திற்காக அரும்பாடு பட்டவர்களையும் நினைவுகூரும் வகையில் சனிக்கிழமை ஆகஸ்ட் 13ம் தேதி முதல் திங்கள்கிழமை ஆகஸ்ட் 15ம் தேதி வரை வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டுமென மக்களுக்குப் பிரதமா் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளாா்.
மக்கள் அனைவரும் வீடுகளில் இரு நாட்களுக்கு கொடியேற்ற ஏதுவாக, புதிய விதிகள் கொண்டு வரப்பட்டன. ஹர்கர் திரங்கா என்ற பெயரிலான இந்த இயக்கத்திற்கு மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. 76-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்றும் ஆா்வம் அதிகரித்துள்ளது.
மக்களின் மனதில் மூவர்ணக் கொடியின் மீதான பிடிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதே வீட்டுக்கு வீடு தேசியக் கொடி ஏற்றுங்கள் என்ற இயக்கத்தின் நோக்கம் ஆகும். மக்கள் அனைவரும் வீடுகளில் இரு நாட்களுக்கு கொடியேற்ற ஏதுவாக, புதிய விதிகள் கொண்டு வரப்பட்டன.