மதுரை: பாஜக மதுரை மாநகர தலைவராக இருந்த டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்த பின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடல் மதுரைக்கு இன்று (ஆக.13) கொண்டு வரப்பட்டு அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக லெட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் தமிழத அரசு சார்பில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் அனிஷ்சேகர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது அமைச்சருக்கும், அங்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த பாஜக மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அமைச்சர் சென்ற போது விமானநிலையத்துக்கு வெளியே நின்றிருந்த பாஜகவினர் அமைச்சர் கார் மீது காலணியை வீசினர். அமைச்சரின் காரை கைகளாலும், கொடிக்கம்புகளாலும் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக பாஜகவினர் 6 பேரை அவனியாபுரம் போலீஸார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் மதுரையில் பரபரப்பான சூழ்நிலை நிலவிவரும் நிலையில், மதுரை மாநகர பாஜக தலைவராக செயல்பட்டுவந்த முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்த பின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமைச்சர் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சரவணன், “காலையில் நிகழ்ந்த சம்பவம் மன அமைதியை கெடுத்துவிட்டது; மன அமைதி வேண்டி தற்போது அமைச்சரை சந்தித்து நேரில் மன்னிப்பும் கேட்டதாக” தெரிவித்துள்ளார். மேலும், “பாஜகவின் மத மற்றும் வெறுப்பு அரசியல் தனக்கு பிடிக்கவில்லை” என்றும் சரவணன் பேசியுள்ளார்.
காலை இந்த சர்ச்சை தொடங்கிய சிலமணி நேரங்களுக்கு செய்தியாளர்களைச் சந்தித்த சரவணன், “அமைச்சர் பிடிஆர் திமுகவால் வெற்றி பெற்றவர். தனிப்பட்ட செல்வாக்கால் வெற்றிபெறவில்லை. அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் மத்திய தொகுதியில் போட்டியிடட்டும். நானும் அங்கு போட்டியிடுகிறேன். யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பார்ப்போம். அமைச்சரின் செயல்பாட்டை பார்த்து திமுகவினரே கொதித்து போய் உள்ளனர். அமைச்சர் பண்பாடு இல்லாமல் நடந்து கொண்டார். அவரை அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் நீக்க வேண்டும்.” என்று பேட்டி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.