கோவில் சொத்துக்கள் அறநிலைய துறையின் உடமை அல்ல! சென்னை உயர் நீதிமன்றம் நெத்தியடி…

சென்னை: கோவில் சொத்துக்களை அறநிலையத் துறை சொத்துக்களாக கருதக் கூடாது என சென்னை நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்து உள்ளது. கோவில்களை அறநிலையத்துறையின் உடமையாக உரிமை கோர முடியாது என்றும் கூறி உள்ளது.

தமிழகத்தில் உள்ள ஆலயங்களின் சொத்துக்களை இந்து சமய அறநிலைய துறை சொத்துக்களாகவோ; கோவில்களை அறநிலைய துறை கோவில்களாகவோ உரிமை கோர அரசுக்கு தடை விதிக்க கோரி  திருச்சி  ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை, சம்பந்தப்பட்ட கோவில்களின் நலனுக்கு மட்டுமே இந்து சமய அறநிலையத்துறை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. அரசு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், அறநிலையத் துறை சட்டப்படி, கோவில் சொத்துக்களை கோவில் நலனுக்காக, அறநிலையத் துறை ஆணையரின் ஒப்புதல் இல்லாமல் குத்தகைக்கு விட அனுமதியில்லை என்பதை தெளிவுபடுத்தியது.

மேலும்,  கோவில் சொத்துக்களை குத்தகைக்கு கொடுக்க  அறநிலையத் துறை ஆணையருக்கு அதிகாரம் இருந்தாலும், அதுசம்பந்தமாக அறங்காவலர்களின் ஆட்சேபனைகளை கேட்க வேண்டும் என சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள்,  கோவில் சொத்துக்களை அறநிலையத் துறை சொத்துக்களாக கருதக் கூடாது என அறிவுறுத்தியதுடன், அவற்றை அறநிலையத் துறை சட்டப்படி மட்டுமே குத்தகைக்கோ அல்லது வாடகைக்கோ மட்டும் விட முடியும் என்பதையும் தெரிவித்தனர்.

அரசின் இந்து சமய அறநிலைய துறை, கோவில் சொத்துக்களை தனது சொத்துக்களாக கருதக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்ததுடன்,  கோவில்களை அறநிலைய துறை கோவில்களாகவோ உரிமை கோர முடியாது என்றும் கூறி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.