மதுரை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசியதை கண்டித்து மதுரையில் திமுகவினர் ரயில் மறியல், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடல் மதுரைக்கு இன்று (ஆக.13) கொண்டு வரப்பட்டு அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக லெட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் தமிழத அரசு சார்பில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் அனிஷ்சேகர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது அமைச்சருக்கும், அங்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த பாஜக மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அமைச்சர் சென்ற போது விமானநிலையத்துக்கு வெளியே நின்றிருந்த பாஜகவினர் அமைச்சர் கார் மீது காலணியை வீசினர். அமைச்சரின் காரை கைகளாலும், கொடிக்கம்புகளாலும் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக பாஜகவினர் 6 பேரை அவனியாபுரம் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், அமைச்சர் கார் மீது காலணி வீசிய பாஜகவினரை கண்டித்து மதுரையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் நேற்று போராட்டம் நடத்தினர். மதுரை ரயில் நிலையத்துக்குள் நுழைந்து திருச்செந்தூர்- பாலக்காடு ரயில் எஞ்சின் மீது ஏறி நின்று பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல், மனித சங்கிலி என பல்வேறு போராட்டங்களில் திமுகவினர் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் பாஜக தலைவர் அண்ணாமலை உருவப்பொம்மையை எரித்தனர். இதனால் மதுரை பரபரப்புடன் காணப்படுகிறது.