மதுரை: ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்துவதில் எழுந்த பிரச்சனை தொடர்பாக நள்ளிரவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதில், நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும் மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணனுக்கும் விமான நிலையத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பாஜகவினர் 6 பேர் கைதான நிலையில், இன்று நள்ளிரவில் திடீரென மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அவரது வீட்டிற்கு வந்து சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.
விலகும் முடிவு ஏன் எடுக்கப்பட்டது, அமைச்சரை நள்ளிரவில் சந்தித்தது ஏன் என்பதை செய்தியாளர்கள் மத்தியில் விளக்கினார் சரவணன். செய்தியாளர்கள் சந்திப்பில், “இன்று காலை உயிரிழந்த தமிழக வீரர் லெட்சுமணனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பாஜக மாவட்ட தலைவர் என்ற முறையில் சென்றிருந்தேன். அப்போது அமைச்சர் என்ன தகுதியின் அடிப்படையில் வந்தீர்கள் எனக் கேட்டார். அந்த நேரத்தில் இதை பெர்சனலாக எடுத்துவிட்டோம். இதன்பின் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துவிட்டது.
வீட்டுக்குச் சென்ற பிறகு இந்த சம்பவம் மன உறுத்தலாக இருந்தது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளிநாட்டில் படித்தவர் என்பதால் அவருடைய தமிழில் விமான நிலையத்தில் பேசினார். அரசின் நெறிமுறைகள்படி, அரசை சார்ந்தவர் தான் விமான நிலையத்திற்குள் அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதை எந்த தகுதி என்ற அர்த்தத்தில் பேசி இருக்கிறார். நான் உட்பட அங்கிருந்த பாஜக தொண்டர்கள் அனைவரும் அந்த நேரத்தில் இது புரியாமல் தனிமனித தாக்குதலாக எடுத்துக்கொண்டோம்.
எனது குடும்பம் சுயமரியாதை மற்றும் திராவிட பின்னணியில் இருந்து வந்தவர்கள். கடந்த ஒரு வருடத்துக்கு முன்புதான் பாஜகவில் இணைந்தேன். பாஜகவில் சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு போக்கு நடந்துகொண்டே உள்ளது. இந்த மனஉளைச்சலோடு அந்தக் கட்சியில் பயணித்து கொண்டிருந்தேன். நிறைய இடங்களில் இதை வெளிப்படுத்தியும் இருக்கிறேன். இந்த மாதிரியான நிலையில் ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது மிகப்பெரிய மனஉளைச்சலை கொடுத்தது. இதனால் தூக்கம் வரவில்லை. யோசித்து பார்த்தேன். அமைச்சருக்கு போன் செய்து உங்களை பார்க்க வேண்டும் என்று கேட்டேன். இது நான் அடிக்கடி வந்துசென்ற எனது தாய் வீடுதான். இங்கு வந்து எனது வருத்தத்தையும் மன்னிப்பையும் அமைச்சரிடம் தெரிவித்தேன்.
இதற்கு முன் கார்கில் சண்டையின்போது இதேபோன்று ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது நான் எம்எல்ஏவாக இருந்தேன். அதனால் வீரருக்கு அஞ்சலி செலுத்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இன்றைக்கு நானும் ஒரு பொதுமனிதன் தான். விமானநிலையத்தில் நான் இருந்திருக்ககூடாது. என்றாலும், எனக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அஞ்சலிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், தொண்டர்கள் கட்டுப்பாட்டை இழந்து நடந்துகொண்டது வேதனையாக இருந்தது. அந்தநேரத்தில் இருந்த உணர்ச்சியில் அப்படி செய்துவிட்டார்கள். இதை அமைச்சரிடம் விளக்கமாக சொன்னேன். அவரும் இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டார்.
ஆரம்பத்தில் இருந்து சுயமரியாதை இயக்கத்தில் வளர்ந்த நான், இந்த மாதிரியான அரசியலை செய்வதற்கு ஒரு ஆளாக இருந்துவிட கூடாது என்ற அடிப்படையில் அமைச்சரை நேரில் சந்தித்தேன். இப்போது எனது மனம் நிம்மதியாக இருக்கிறது. வீட்டிற்கு சென்று நிம்மதியாக தூங்குவேன்” என்று விளக்கமாக பேசினார் சரவணன்.
தொடர்ந்து செய்தியாளர்கள் அமைச்சரை சந்தித்ததால் பாஜகவில் பதவிக்கு ஆபத்து வருமே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கொடுத்த சரவணன், “பதவியை விட மன அமைதி முக்கியம். இனி பாஜகவில் தொடர மாட்டேன். மத அரசியலும், வெறுப்பு அரசியலும் எனக்கு பிடிக்கவில்லை, ஒத்தும் வரவில்லை. பாஜகவில் இருந்து விலகுவதற்கு நேற்று நடந்த சம்பவம் மட்டுமல்ல, தொடர்ச்சியான மன உளைச்சலும் ஒரு காரணம். இதை அமைச்சரிடம் தெரிவித்து, எனது மனதில் இருப்பதை அவரிடம் கொட்டினேன். நாளை எனது ராஜினாமா கடிதத்தை பாஜகவுக்கு அனுப்புவேன்” என்றார்.
திமுகவில் இணைவது தொடர்பான கேள்விக்கு, “இப்போதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. சுயமரியாதையாக இருக்க வேண்டும் அவ்வளவுதான். இனி டாக்டர் தொழிலை கவனிப்பேன். எனது ட்ரஸ்ட் மூலம் மக்கள் பணிகளை கவனிப்பேன். அடுத்தகட்ட நகர்வுகள் காலப்போக்கில் பார்க்கலாம். எனினும், திமுகவில் இணைந்தாலும் தவறில்லை. எனது தாய்வீடு தான் இது. பதினைந்து வருடங்களாக நான் பயணித்த, உழைத்த கட்சி தான் திமுக” என்று விளக்கமளித்தார் சரவணன்.